முகப்பு
கடலூர்

கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் வைகாசிப் பெருவிழா கொடியேற்றம்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழாவுக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 மே, 2018 at 8:11 AM
பகிர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழாவுக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நடுநாட்டு திருத்தலங்களில் பாடல் பெற்ற சிவத் தலமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில் போற்றப்படுகிறது. 
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசிப் பெருவிழா முக்கியமானதாகும்.  
நிகழாண்டுக்கான வைகாசி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
இந்த விழாவை முன்னிட்டு சனிக்கிழமை விக்னேஸ்வரர் பூஜையும், அன்று இரவு 9 மணிக்கு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் ராஜவீதியில் உலாவும் நடைபெற்றது. 
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. 
தொடர்ந்து சோமாஸ்கந்தர் சந்நிதியில் யாத்ராதானம் செய்யப்பட்டு, உள்பிரகாரத்தில் பஞ்ச மூர்த்திகள் வலம் வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது. அதன்பிறகு கோயில் கொடி மரத்துக்கு அருகே விநாயகர் வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து, வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க காலை 7.30 மணியளவில் மிதுன லக்னத்தில் கொடி மரத்தில் வைகாசி பெருவிழா கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு தீபாராதனை நடைபெற்று, பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது. இரவு 9 மணியளவில் இந்திர விமானத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது. 
விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக 24-ஆம் தேதி அதிகாரநந்தி கோபுர தரிசன நிகழ்ச்சியும், அன்று இரவு தெருவடைச்சான் உற்சவமும், 26-ஆம் தேதி கைலாசவாகனம் கோபுர தரிசனமும், இரவு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. 
தொடர்ந்து 28-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 29-ஆம் தேதி காலை தீர்த்தவாரி உற்சவமும், இரவு முத்துப் பல்லக்கில் சாமி வீதிஉலாவும், 30-ஆம் தேதி இரவு முருகன் தெப்ப உற்சவமும், 31-ஆம் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சியும், இரவு திருஞானசம்பந்தர் திருக்கல்யாண உற்சவமும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறுகிறது. 
 இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோயில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.