முகப்பு
கடலூர்

கடலூர் பேருந்து நிலையத்தில் சுகாதாரச் சீர்கேடு!

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். 

Updated On : 21 மே, 2018 at 8:09 AM
பகிர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். 
இந்தப் பேருந்து நிலையத்துக்கு தினமும் சுமார் ஆயிரம் பேருந்துகளும், சுமார் 10 ஆயிரம் பயணிகளும் வந்து செல்கின்றனர். ஆனால், கடலூர் பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற புகார் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கேற்ப, சுகாதாரம் இல்லாத நிலையிலேயே இந்தப் பேருந்து நிலையம் காணப்படுகிறது. பேருந்துகள் உள்ளே நுழையும் வாயிலில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. 
 அதிலும், நகராட்சி ஊழியர்களால் பேருந்து நிலையத்திலுள்ள கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், அந்தப் பகுதியிலேயே கொட்டி வைக்கப்பட்டு இரவில் மட்டுமே அள்ளிச் செல்லப்படுகிறது. இதனால், பகல் முழுவதும் குப்பைகள் அதேப் பகுதியில் குவிந்து கிடந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், இலவச கழிப்பிடமும் தூய்மையாகப் பராமரிக்கப்படாததால், பயணிகள் கழிப்பிடத்தின் வாசலிலேயே மூக்கைப் பிடித்துக் கொண்டு இயற்கை உபாதைகளை கழித்துச் செல்கின்றனர். மேலும், அருகே உள்ள பகுதிகளையும் பொதுமக்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து கடலூர் நகராட்சி ஆணையர் க.சரவணன் கூறியதாவது: கடலூர் பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்திருக்க இரவு நேரங்களில் தூய்மைப் பணி மேற்கொண்டு வருகிறோம்.  இந்தப் பேருந்து நிலையத்தில் தூய்மையைப் பராமரித்திட துப்புரவுப் பணியை தனியாருக்கு விட முடிவெடுத்துள்ளோம். எனவே, பேருந்து நிலைய பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.