மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்க விவசாயிகள் கோரிக்கை
காவிரி டெல்டா மாவட்டங்களில் மூடப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மூடப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆண்டுதோறும் மேட்டூர் அணை திறக்க நிர்ணயிக்கப்பட்ட நாளான ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டால் காவிரி பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடியும், அதைத் தொடர்ந்து தாளடி, சம்பா, நவரை சாகுபடிகள் நடைபெறும். காவிரி பாசனமில்லாத மாவட்டங்களில் சொர்ணவாரி, சம்பா, நவரை சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொள்வது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாமல் தாமதமாக அணை திறக்கப்படுவதால் குறுவை சாகுபடி பொய்த்துப் போனது. இருப்பினும், நிலத்தடி நீரைக் கொண்டு விவசாயிகள் குறைந்த அளவில் குறுவை சாகுபடி செய்தனர். மேட்டூர் அணை திறக்கப்பட்டு தண்ணீர் கிடைக்கும் காலத்தைப் பொறுத்து விவசாயிகள் அந்தப் பருவத்துக்கேற்ப நெல் சாகுபடி செய்து வந்தனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் அரசே நெல் கொள்முதல் செய்வது வழக்கம். அந்த வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்.
மத்திய அரசானது பொது விநியோகத் திட்டத்துக்கு தேவையான அரிசியை மாநிலங்களின் மூலம் கொள்முதல் செய்யும் நடவடிக்கை ஆண்டுதோறும் அக்.1-இல் தொடங்கி அடுத்த ஆண்டு ஆக.31-ஆம் தேதி வரை கரீப் பருவ கொள்முதல் காலமாக நிர்ணயித்து கொள்முதல் செய்து வருகிறது.
இதன்படி, நெல் கொள்முதல் காலம் 01-10-2017 அன்று முதல் நடைமுறைப்படுத்தினாலும், 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்ட கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் வழக்கம்போல ஆக. 31-ஆம் தேதி மூடப்பட்டுவிட்டன. மத்திய அரசு உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடியது வழக்கமான ஒன்றாகவே கருதினாலும், இந்த நடவடிக்கை விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்காததாலும், போதிய மழை இல்லாததாலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துபோனது. இந்த நிலையில், நிகழாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜூன் மாதம் ஓரளவு பெய்த மழையால் நிலத்தடி நீரைக் கொண்டு குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடை செய்ய தயாராக இருந்தனர். இந்த நிலையில், அண்மையில் பெய்த மழையால் அறுவடைப் பணி தாமதமாக தொடங்கி சீராக நடைபெறுகிறது. இதற்கேற்ப மூடப்பட்ட கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலர் பெ.ரவீந்திரன் கூறியதாவது:
பொதுவாக குறுவை சாகுபடியில் நெல்மணிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட 17 % ஈரப்பதத்துக்கு அதிகமாக ஈரப்பதம் இருக்கும். குறுவை நெல்லை காய வைத்து கொடுக்க ஏற்படும் பணிச் சுமையைக் கருதி விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்வது வழக்கம். ஆனால், தற்போது மழை பெய்து வருவதால் விவசாயிகள் தருணம் பார்த்து அறுவடை செய்ய வேண்டிய நிலையில் உள்ளன.
இந்த நிலையில், ஈரப்பதம் அதிகமாக இருப்பதைக் காரணம் காட்டி தனியார் வியாபாரிகள் நெல்லை மிக குறைந்த விலைக்கு வாங்குகிறார்கள். இதனால், விவசாயிகளுக்கு மிகப் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும்.
மேலும், மத்திய அரசின் கொள்கை முடிவின்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் எவ்வித அறிவிப்புமின்றி மூடப்பட்டதால் அறுவடை செய்த நெல், அறுவடை செய்ய தயாராக உள்ள நெல் பயிர்களை 01-10-2018 வரை பாதுகாப்பது சிரமம். இதற்கு போதுமான இட வசதியும் இல்லாததால் குறுவை சாகுபடி விவசாயிகள் மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, தமிழக அரசு குறுவை சாகுபடி விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆக.31-ஆம் தேதி மூடிய அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.