கடலூர்

நெகிழிப் பொருள்களுக்கு தடை: உணவுப் பாதுகாப்புத் துறையினர் சோதனை

DIN

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடலூரில் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். 
தமிழகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி வீசப்படும் 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு கடந்த 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட உணவுப் பொருள் பாதுகாப்பு நியமன அலுவலர் நா.தட்சிணாமூர்த்தி தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பா.சந்திரசேகரன், பெ.நல்லதம்பி, சொ.ஏழுமலை, க.சுப்பிரமணியன் ஆகியோர் வியாழக்கிழமை கடலூர் பேருந்து நிலையப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பல்வேறு கடைகளில் விநியோகத்துக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 25 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும், கடைகளில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் சோதனையிட்டனர்.
 பின்னர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது: நெகிழிப் பொருள்களுக்கான தடைக்கு வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, இதுதொடர்பாக தொடர்ந்து ஒரு வாரம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுவோம். பின்னர், அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம்.
 பொதுமக்கள் காலாவதியான பொருள்கள் விற்பனை, தரமற்ற மற்றும் உற்பத்தி, காலாவதி தேதி குறிப்பிடப்படாத பொருள்கள் விற்பனை குறித்த புகார்களை 94440 42322 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) எண்ணில் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் சென்னையிலுள்ள மாநில உணவுப் பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT