முகப்பு
கடலூர்

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி: வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு

கடலூர் மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Updated On : 23 ஜனவரி 2019, 8:44 am IST
பகிர்:

கடலூர் மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இளைஞர்களிடம் விளையாட்டு மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்படி, 2018-19-ஆம் ஆண்டுக்கான போட்டிகள் வருகிற 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளன. இதில்,  குழுப் போட்டிகள், தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆண்களுக்கான நீச்சல், கூடைப் பந்து, வாலிபால், கபடி, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, பூப்பந்து, பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகள் 28-ஆம் தேதி நடைபெறுகின்றன. இதே பிரிவிலான போட்டிகள் பெண்களுக்கு 29-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இருபாலருக்குமான தடகளப் போட்டிகள் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்பவர்கள் 31.12.2018 அன்று 21 வயது பூர்த்தி அடையாதவர்களாக இருக்க வேண்டும். 
மாவட்ட அளவிலான தடகளம், நீச்சல் போட்டியில் முதலிடம் பெறுபவர்கள், குழு விளையாட்டுப் போட்டியில் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனையாக தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் மாவட்ட அணியாக, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுப்பி வைக்கப்படுவார்கள். தனிநபர், குழுப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பெறுவோருக்கு முறையே தலா ரூ.ஆயிரம்,  ரூ.750, ரூ.500 பரிசுத் தொகையாக வங்கிக் கணக்கு மூலமாக வழங்கப்படும்.  தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தங்களது அணியின் பெயர்களை வருகிற 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் கட்டாயமாக  முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் மா.ராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.