உப்பனாற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
சிதம்பரம் நகரின் வடிகால் ஆறாக உள்ள உப்பனாறு ஆக்கிரமிக்கப்பட்டு, சுருங்கி கழிவு நீர் கலந்து தேங்கி நிற்கிறது.
சிதம்பரம் நகரின் வடிகால் ஆறாக உள்ள உப்பனாறு ஆக்கிரமிக்கப்பட்டு, சுருங்கி கழிவு நீர் கலந்து தேங்கி நிற்கிறது. மழைக் காலங்களில் மாரியப்பா நகர் உள்ளிட்ட பல்வேறு நகர்களில் நீர்புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிதம்பரம் அருகே உப்பூர் பஞ்சாயத்துக்கு உள்பட்ட மாரியப்பா நகரில் உசுப்பு உப்பனாறு தொடங்கி பிச்சாவரத்தில் கடலில் கலக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விசாலமான இந்த உப்பனாற்றில் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் தற்போது பலர் இந்த உப்பனாற்று வாய்க்காலை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியும், கழிப்பறைகள் அமைத்தும் கழிவு நீரை உப்பனாற்று வாய்க்காலில் விட்டு வருகின்றனர்.
ஆக்கிரமிப்பு செய்ததால் இந்த உப்பனாறு வாய்க்கால் தனது முழு பரப்பளவையும் இழந்து ஒரு சிறிய வாய்க்கால் போல காட்சியளிக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் அந்த இடத்தில் உப்பனாறு இருந்ததற்கான அடையாளமே தெரியாது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் உசுப்பூர் கிராம சபைக் கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்காலை சுத்தம் செய்யவேண்டும் என வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் மாரியப்பா நகர் உப்பனாறு வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
பல்வேறு பிரமுகர்களின் செல்வாக்கோடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பாலாற்றில் இருந்து பிரியும் இந்த உப்பனாறு பிச்சாவரத்தில் கலக்கிறது. ஆனால் முழுக்க முழுக்க கழிவுநீர் தான் இதில் செல்கிறது. மேலும், இந்த ஆற்றில் புதர் மண்டிக் கிடக்கிறது.
உப்பனாற்றின் இரு புறமும் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள், கழிப்பறைகள் கட்டப்பட்டுவிட்டன. இதனால், குறுகிய வாய்க்காலில் தண்ணீர் செல்ல வழியின்றி மாரியப்பா நகர் பகுதி ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தில் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்காலின் முழு கொள்ளளவுக்கு நீர் செல்ல கடலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இடிந்து கிடக்கும் படித்துறைகளை செப்பனிட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாரியப்பநகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்