மீன் அருங்காட்சியகம் மீண்டும் செயல்படுமா?
கடலூரில் அமைக்கப்பட்ட மீன் அருங்காட்சியகத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடலூரில் அமைக்கப்பட்ட மீன் அருங்காட்சியகத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாவட்டத் தலைநகரான கடலூரில் நகராட்சியின் கட்டுப்பாட்டில் சுப்பராயலு பூங்கா அமைந்துள்ளது. நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பூங்காவின் ஒரு பகுதியில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீன் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மீன்வளத் துறை, பரங்கிப்பேட்டையில் உள்ள கடல்மீன் ஆராய்சித் துறை ஆகியவற்றின் ஏற்பாட்டின்பேரில் ரூ.27.20 லட்சத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.
இதில், கடலில் வாழும் அரிய வகை மீன்கள், நண்டுகள், இறால்கள் உள்ளிட்ட பலவகை உயிரினங்கள் பொதுமக்களின் பார்வைக்காக உயிருடன் காட்சிப்
படுத்தப்பட்டன.
சுப்பராயலு பூங்காவுக்கு வருவோர் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டுச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக தனியாக கட்டணம் வசூலிக்காமல், பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்திலேயே அனுமதிக்கப்பட்டு வந்தது. பள்ளி மாணவ, மாணவிகளும், உயிரினங்கள் தொடர்பான படிப்புகளை மேற்கொண்டு வருவோரும் ரசித்து பார்த்து வந்த இந்த அருங்காட்சியகம் பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இங்கு வைக்கப்படும் மீன்களை பராமரிக்கும் பணியில் ஈடுபடும் பரங்கிப்பேட்டை கடல்மீன்வள ஆராய்ச்சித் துறைக்கு கடலூர் நகராட்சி நிர்வாகம் பராமரிப்புத் தொகையை வழங்க வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தொடங்கிய சில மாதங்களிலேயே மீன் அருங்காட்சியகம் செயல்படாமல் முடங்கியது.
தொடர்ந்து வந்த பல்வேறு நகராட்சி ஆணையர்களும் இந்த அருங்காட்சியகம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, நகராட்சி மூலமாக நுழைவுக் கட்டணத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்ட நிலையில், ஒருவருக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.5 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், மீன் அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்காகவும் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அருங்காட்சியகம் செயலற்றுப்போனதால் அதை யாரும் பார்க்க முடியவில்லை.
இதுகுறித்து, கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்க பொதுச் செயலர் மு.மருதவாணன் கூறியதாவது: கடற்கரை நகரமான கடலூரில் கடல் வாழ் உயிரினங்கள் தொடர்பாக சிறிய அளவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அந்த அருங்காட்சியகமும் முடங்கிப்போனதை ஏற்க முடியாது. பாரதி சாலையில் மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் ஆகியோரது பார்வையில் படும் நிலையில் உள்ள இந்த அருங்காட்சியகத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து நகராட்சித் தரப்பினர் கூறியதாவது: சுப்பராயலு பூங்காவுக்காக வசூலிக்கப்படும் குறைந்தளவு கட்டணத்தில் மீன் அருங்காட்சியக பராமரிப்புக்காக பணத்தைச் செலுத்த முடியவில்லை.
இதனால், மீன்வளத் துறையினர் முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டனர். விரைவில், இதை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.