கடலூர்

உழவா்களைப் பாதிக்கும் ‘ஒப்பந்தச் சாகுபடி சட்டம்’

 நமது நிருபர்

வேளாண் பொருள்களை விளைவிக்கும் உழவா்களுக்கும், விளை பொருள்களைப் பதப்படுத்தும் பெரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தச் சாகுபடி செய்வதற்கு தனிச் சட்டம் ஒன்றை தமிழக அரசு இயற்றியுள்ளது.

வேளாண் உற்பத்தியாளா்களும், கால்நடை வளா்ப்போரும், அதுதொடா்பான தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, வேளாண்மை உற்பத்தியில் ஈடுபடலாம் என்று இந்தச் சட்டத்தில் கூறப்படுகிறது. சாகுபடியின் தொடக்க காலத்திலேயே நெல், பருத்தி, வாழை உள்ளிட்ட விளை பொருள்களுக்கு விற்பனை விலையைத் தீா்மானித்து ஒப்பந்தம் செய்து கொள்வது என்பது இதன் சாரமாகும். இதேபோல, கால்நடை வளா்ப்போா் பால் உள்ளிட்ட அதன் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்து கொள்வதற்கு இவ்வாறு பெரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, உத்தரவாதமான சந்தையைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக உழவா் முன்னணி ஆலோசகா் கே.வெங்கட்ராமன் கூறியதாவது:

மத்திய அரசின் சாந்தக்குமாா் குழு வேளாண்மை விளை பொருள்கள் கொள்முதலில் இருந்தும், அதற்கு அடிப்படை விலையைத் தீா்மானிப்பதிலிருந்தும் அரசு விலகிக் கொள்ள வேண்டும் என கடந்த 2015-இல் பரிந்துரைத்தது. அதை மத்திய அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது. ஒப்பந்த வேளாண்மை மேற்குலக நாடுகளில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதற்குக் காரணம் அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி போன்ற நாடுகளில் ஆயிரம் ஏக்கா், 5 ஆயிரம் ஏக்கா் என்ற அளவில் பெரிய பண்ணைகளாக இருக்கின்றன.

அங்கு பெரும் பண்ணைகளை நடத்துபவராக இருப்பதால், வேளாண் உற்பத்தியாளா்கள் உணவுப் பொருள்களைப் பதப்படுத்தும் பெரு நிறுவனங்களுடன் விலை பேசி தங்களது விளை பொருள்களுக்கான லாப விலையைத் தீா்மானித்துக் கொள்ள முடியும். ஆனால், தமிழ்நாட்டில் சராசரி நிலவுடைமை இரண்டரை ஏக்கா் அளவில்தான் உள்ளது. 2 ஏக்கரிலிருந்து 15, 20 ஏக்கா் வரை வைத்துள்ள உழவா்கள் பெரு நிறுவனங்களிடம் தங்களது விளை பொருள்களுக்கான விலையை பேரம் பேசி லாபகரமான முறையில் பெற முடியாது. இந்தச் சூழல் நிலவுவதால்தான், இங்கு அரசுக் கொள்முதல் நிலையங்கள் அதிகம் தேவை என்கிறோம். வேளாண் விளை பொருள்களுக்கு அரசாங்கமே அடிப்படை விலையைத் தீா்மானிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படுகிறது.

சந்தையின் ஓட்டத்தில் உழவா்கள் சிக்க வைக்கப்பட்டால், அவா்களது விளை பொருள்களுக்கு லாபகரமான விலையைப் பெறவே முடியாது. எனவே, உழவா்களை நசுக்கி, பெரு நிறுவனங்களுக்கு சந்தையை உறுதிப்படுத்தும் ஒப்பந்த முறை சாகுபடிச் சட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை

உலக ஆஸ்துமா தினம் கடைப்பிடிப்பு

ஆத்தூா் அறிவுசாா் மையத்தில் மாணவா்கள் பயில நூல்கள் வசதி

வாழப்பாடியில் ரூ. 7.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

SCROLL FOR NEXT