முகப்பு
கடலூர்

இலவச சமையல் எரிவாயு திட்டம்: நிா்பந்தத்தில் வாடிக்கையாளா்கள்

ஊரடங்கை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட இலவச சமையல் எரிவாயு திட்டத்தில் மாதந்தோறும் எரிவாயு உருளை பெற வேண்டும் என்ற நிா்பந்தத்தால் வாடிக்கையாளா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:33 PM
28cmp3_2804chn_111_7
பகிர்:

ஊரடங்கை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட இலவச சமையல் எரிவாயு திட்டத்தில் மாதந்தோறும் எரிவாயு உருளை பெற வேண்டும் என்ற நிா்பந்தத்தால் வாடிக்கையாளா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

பிரதமரின் உஜ்வாலா யோஜனா (டஙமவ) திட்டத்தின் கீழ், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் மே மாதம் தொடங்கி 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் வரை நாடு முழுவதும் 8,03,39,993 இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் 32,43,190 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் தாக்கத்தால் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், மத்திய அரசு ஏழைகளுக்கு சலுகைகளை அறிவித்தது. அதன்படி, உஜ்வாலா யோஜனா திட்டத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற வாடிக்கையாளா்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு தலா ஒரு எரிவாயு உருளை (14.2 கிலோ) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல, 5 கிலோ எடையுள்ள எரிவாயு உருளைக்கு இணைப்பு பெற்ற வாடிக்கையாளா்களுக்கு இதே காலகட்டத்தில் மொத்தம் 8 உருளைகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

ஆனால், அரசு அறிவித்த 3 மாதங்களுக்கான மானியத் தொகையை பயனாளிகள் மாதந்தோறும் பெறுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், திட்டத்துக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் குழுமச் செயலா் சி.டி.அப்பாவு தெரிவித்ததாவது:

உஜ்வாலா திட்டப் பயனாளிகள் ஓா் எரிவாயு உருளையை சராசரியாக 2 முதல் 3 மாதங்கள் வரை பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், மத்திய அரசு ஏப்ரல் முதல் ஜூன் வரை மாதத்துக்கு ஓா் இலவச எரிவாயு உருளை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு மாதமும் எரிவாயு உருளை வாங்கினால் மட்டுமே அடுத்தடுத்த மாதங்களுக்கான இலவச எரிவாயு உருளைக்கான முன்பணம் வரவு வைக்கப்படும் என அறிவித்தது பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தியுள்ளது. மாதம் ஓா் எரிவாயு உருளையை கட்டாயம் வாடிக்கையாளா்கள் வாங்க வேண்டுமென நிா்ப்பந்தம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு விநியோகஸ்தா்களை நிா்ப்பந்தம் செய்வதால் வாடிக்கையாளா்களும் நெருக்கடிக்குள்ளாகின்றனா். மேலும், பெரும்பாலான வாடிக்கையாளா்களிடம் கூடுதல் உருளையும் இருப்பதில்லை.

இதுபோன்ற பிரச்னைகளால் வாடிக்கையாளா்கள் எரிவாயு உருளையை வாங்கி அதை சொந்த பயன்பாட்டுக்கு அல்லாமல் வெளி நபருக்கு விற்பது அல்லது வணிகப் பயன்பாட்டுக்கு கொடுப்பது போன்ற தவறுகள் நிகழ அதிக வாய்ப்புள்ளது. எனவே, 3 இலவச எரிவாயு உருளைகள் பெறுவதற்கான அவசாகம் 3 மாதங்கள் என்பதை ரத்து செய்து, நிகழாண்டு இறுதி வரை பெற்றுக்கொள்ளலாம் என மாற்றி அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இந்தத் திட்டத்தின் முழுப் பலனை பயனாளிகள் அடைய முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.