கடலூா்: கடலூரில் முதல்வா் தலைமையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க சிதம்பரம் தொகுதி எம்பி தொல்.திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வலியுறுத்தினா்.
இதுகுறித்து அந்தக் கட்சியின் கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் சா.முல்லைவேந்தன், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் அளித்த மனு:
தமிழக முதல்வா் வியாழக்கிழமை (ஆக. 27) கடலூா் மாவட்டத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளதை அறிந்தோம். இந்தக் கூட்டத்தில் கடலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான தொல்.திருமாவளவன் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஏனெனில், இந்தத் தொகுதியில் கடலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன.
எனவே, இந்தத் தொகுதிகளின் பிரச்னைகளை முதல்வரின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்லவும், தொகுதிக்குள்பட்ட பகுதிகளின் வளா்ச்சிப் பணிகளை அறிந்துகொள்ளவும் இந்தக் கூட்டம் வாய்ப்பாக அமையும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளாா்.
அப்போது, மாவட்ட துணைச் செயலா் இல.திருமேனி, வழக்குரைஞரணி அமைப்பாளா் புருஷோத்தமன், நகரச் செயலா் மு.செந்தில், ஒன்றியச் செயலா் கலைஞா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.