முகப்பு
கடலூர்

கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு

கடலூர் மாவட்ட வேளாண் பாசனத்திற்கு கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரை தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
பாசனத்திற்கு நீர் திறந்து விட்ட அமைச்சர் எம்.சி.சம்பத்
பகிர்:

கடலூர் மாவட்ட வேளாண் பாசனத்திற்கு கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரை தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதியன்று பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையினை வந்தடைந்தது. கல்லணையிலிருந்து ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று திறக்கப்பட்ட தண்ணீர் ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று கீழணையை வந்தடைந்தது.

கீழணை வந்தடைந்த தண்ணீரை அணையில் தேக்கப்பட்டு கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட பாசனத்திற்கு விகிதாச்சார  அடிப்படையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கீழணை மற்றும் வீராணம் ஏரி தண்ணீர் திறப்பு நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமை வகித்தார். தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கீழணையிலிருந்து வடவாறு, வடக்குராஜன் வாய்க்கால் மற்றும் தெற்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் திறந்து வைத்தார்.

வடவாறு வாய்க்காலில் விநாடிக்கு 600 கனஅடியும், வடக்குராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 400 கனஅடியும், தெற்குராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 400 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டது. வீராணம் ஏரியிலிருந்து ராதா வாய்க்கால் மதகு வழியாக விநாடிக்கு 10 கனஅடியும், வீராணம் புதிய மதகு வழியாக விநாடிக்கு 74 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டது.

கீழணையில் தற்போது 8.50 அடி நீர் உள்ளது. வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 ஆகும். ஏரியின் நீர் இருப்பு 46.10 அடி உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து 354 கனஅடியாக உள்ளது. ஏரியிலிருந்து பாசனத்திற்கு 90 கனஅடி நீரும், சென்னை குடிநீர் வாரியத்திற்கு விநாடிக்கு 67 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.

அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவிக்கையில் கீழணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது கடலூர் மாவட்டத்திற்கு நேரடி பாசனமாக கொள்ளிடம் வடக்குராஜன், கான்சாகிப் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், கஞ்சன்கொல்லை மற்றும் வடவாறு பாசனத்திற்குட்பட்ட மொத்தம் 47,997 ஏக்கர் பாசன பரப்புக்கும், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் உள்ள கொள்ளிடம் தெற்குராஜன் வாய்க்கால் மற்றும் விநாயகன் வாய்க்கால் வாயிலாக நேரடி பாசனமாக மொத்தம் 39,050 ஏக்கர் பரப்பிற்கும், வீராணம் ஏரியிலிருந்து 44,856 பாசன பரப்பிற்கும், ஆக மொத்தம் 1,31,903 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும் பாசன தேவைக்கேற்ப தண்ணீர் அளவு மாற்றியமைக்கப்பட்டு வாய்க்கால்களில் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் பி.ரத்னா, அதிமுக தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்எல்ஏ, கடலூர் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் கு.ரவிமனோகர், சிதம்பரம் கொள்ளிடம் வடநில கோட்ட செயற்பொறியாளர் வை.சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர்கள் அருணகிரி (அணைக்கரை), உதவிப் பொறியாளர்கள் வெற்றிவேல், முத்துக்குமரன், ரமேஷ், வீராணம் ஏரி உதவிப் பொறியாளர் ஞானசேகரன் , விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.ரவீந்திரன், விநாயகமூர்த்தி, விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →