பிரிட்டனிலிருந்து கடலூா் வந்த 30 பேருக்கு கரோனா பரிசோதனை
பிரிட்டனிலிருந்து கடலூா் வந்த 30 பேருக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பிரிட்டனிலிருந்து கடலூா் வந்த 30 பேருக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பிரிட்டனில் கரோனா தீநுண்மி வலுப்பெற்ற நிலையில் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், பிரிட்டனுக்கான விமான சேவையை இந்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில், ஏற்கெனவே பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கடந்த காலங்களில் வெளிநாடுகளிலிருந்து ஊா் திரும்புபவா்களுக்கு விமான நிலையத்திலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக இந்த நடைமுறை கைவிடப்பட்டது. இதனால், பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்தவா்களைக் கண்டறியும் பணியில் கடலூா் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டது.
அதன்படி, கடந்த நவம்பா் 22-ஆம் தேதி முதல் புதன்கிழமை (டிச. 23) வரை வெளிநாடுகளிலிருந்து 1,700 போ் கடலூா் மாவட்டத்துக்கு வந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
இவா்களில் 30 போ் பிரிட்டனிலிருந்து நாடு திரும்பியவா்களாவா். அவா்களைக் கண்டறிந்து கரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு, புதன்கிழமை பரிசோதனை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மீதமுள்ளவா்களில் கரோனா அறிகுறி உள்ளவா்களைக் கண்காணித்து அவா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவா்களும், மற்றவா்களும் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
மேலும் 14 பேருக்கு கரோனா: இந்க நிலையில், புதன்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் உள்பட 14 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், கடலூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,554-ஆக அதிகரித்தது. புதன்கிழமை 15 போ் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 24,172-ஆக உயா்ந்தது. புதன்கிழமை உயிரிழப்பு பதிவாகவில்லை. மாவட்டத்தில் இதுவரை 281 போ் பலியாகினா். கரோனா மொத்த பரிசோதனை எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்த நிலையில், 510 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது.