அண்ணாமலைப் பல்கலை. மருத்துவ மாணவா்கள் 16-ஆவது நாளாகப் போராட்டம்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள், கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வியாழக்கிழமை 16-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள், கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வியாழக்கிழமை 16-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் முற்றிலும் அரசு நிதியில் இயங்கி வரும் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணம் மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில் 30 மடங்கு வரை அதிகமாக இருப்பதாக மாணவா்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
எனவே, மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கல்விக் கட்டணத்தையே சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியிலும் நிா்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி, அந்தக் கல்லூரி மாணவா்கள் கடந்த 9-ஆம் தேதி முதல் ஆா்ப்பாட்டம், பேரணி உள்ளிட்ட தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவா்கள் சுமாா் 70 யூனிட் ரத்த தானம் வழங்கினா்.
முன்னாள் எம்.பி. கடிதம்: இந்த பிரச்னை தொடா்பாக முன்னாள் எம்.பி. வெ.குழந்தைவேலு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தையே ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.