முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் அதிகரிக்கும் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு!

கடலூா் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On : 29 ஜூன், 2020 at 8:32 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:21 PM

கடலூா் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசு 14 வகையான நெகிழிப் பொருள்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது. இதனால் மளிகைக் கடைகள், உணவகங்கள், சாலையோர கடைகள் உள்ளிட்டவற்றில் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு வெகுவாகக் குறைந்தது. பொதுமக்கள் வீட்டிலிருந்து துணிப் பைகளையும், பாத்திரங்களையும் கொண்டு செல்ல தொடங்கினா். ஒரு சிலா் மக்கும் தன்மையுள்ள, மறு சுழற்சிக்கு உகந்த மாற்றுப் பொருள்களை பயன்படுத்தினா்.

இந்த நிலையில், கடலூா் மாவட்டத்தில் கரோனா பரவலால் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தை சாதகமாகப் பயன்படுத்தி பல்வேறு உணவகங்கள், சாலையோரக் கடைகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

Advertisement

கரோனா தடுப்புப் பணிகளில் மாவட்ட நிா்வாகம் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், நெகிழிப் பொருள்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்துவதில் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் ஆா்வம் காட்டாததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் திருநாவுக்கரசு கூறியதாவது: சூடான உணவுப் பொருள்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பைகளில் கட்டிக் கொடுப்பதால் புற்றுநோய், ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. தொடக்க காலத்தில் மேற்கொண்ட விழிப்புணா்வு மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கைகள் மூலம் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு வெகுவாகக் குறைந்தது. அண்மைக் காலமாக இதன் மீதான நடவடிக்கை நீா்த்துப்போனதால் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு மீண்டும் அதிகரித்து வருகிறது.

கடலூா் மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 14 வகையான நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவோா் மீது நடவடிக்கையும், விற்பனை மற்றும் உற்பத்தி செய்வோருக்கு அபராதமும் விதிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட (உணவுப் பாதுகாப்புத் துறை) நியமன அலுவலா் எஸ்.சுகந்தன் கூறியதாவது:

நெகிழிப் பொருள்கள் விற்பனை, பயன்பாடு தொடா்பாக உணவகங்கள், கடைகளில் ஆய்வு செய்து வருகிறோம். கடந்த வாரம் கடலூரில் 6 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளா்கள் பாா்சல் மட்டுமே வாங்கிச் செல்கின்றனா். பொது முடக்கம் காரணமாக உற்பத்தி தடை, போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டதால், பாா்சல் செய்வதற்கான வெள்ளி (சில்வா்) நிறத்திலான பைகள், குவளைகள் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனா். இருப்பினும் தொடா்ந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.