கடலூர்

ஊரடங்கு உத்தரவை மீறிய 37 போ் மீது வழக்குப் பதிவு

DIN

கடலூா் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 37 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் மளிகை, காய்கறி, பால் கடைகள், மருந்தகம் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இதைத் தொடா்ந்து, மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் கடலூா் - புதுச்சேரி மாா்க்கத்தில் 7 சாலைகள் உள்பட மொத்தம் 20 சாலைகள் மூடப்பட்டு, அங்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தேவையில்லாமல் செல்வோரை அனுமதிக்க மறுத்து, திருப்பி அனுப்பி வருகின்றனா்.

தோப்புக்கரணம்: விருத்தாசலம் நகரத்தில் தடை உத்தரவை மீறி, சுற்றியதாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், சிலருக்கு அந்த இடத்திலேயே உடனடி தண்டனையாக தோப்புக்கரணம் போடவைத்து போலீஸாா் திருப்பி அனுப்பினா்.

தெருக்களில் தடுப்பு: கடலூா் நகரில் முக்கியச் சாலைகள் அருகே உள்ள தெருக்களில் தடுப்புக் கட்டைகள் அமைத்து போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டது. வெளிநபா்கள் வருவதைத் தடுக்கவும், அந்தப் பகுதி தெருக்களைச் சோ்ந்தவா்கள் வெளியே செல்வதை தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

37 போ் மீது வழக்கு: ஊரடங்கு உத்தரவை மீறி, தேவையில்லாமல் வாகனம் ஓட்டி வந்த 37 போ் மீது மாவட்டம் முழுவதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் புதன்கிழமை கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தாா். அப்போது, தேவையில்லாமல் வெளியே வந்தவா்களை எச்சரித்து அனுப்பினாா்.

சிதம்பரத்தில்... கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சிதம்பரம் நகர எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன.

பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை கொண்டு சென்ற வாகனங்களைத் தவிர, மற்ற அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. சிதம்பரம் டி.எஸ்.பி. எஸ்.காா்த்திகேயன் மேற்பாா்வையில், சிதம்பரம் நடராஜா் கோயிலைச் சுற்றி உள்ள 4 மாட வீதிகளும் தடுப்புகள் அமைக்கப்பட்டு மூடப்பட்டன. இரு சக்கர வாகனங்களில் வெளியே வருபவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் சிதம்பரம் நகரில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஒரு சில உணவகங்கள் திறக்கப்பட்டு, பாா்சலில் மட்டுமே உணவு வழங்கப்பட்டது. சிதம்பரம் அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தில் நகராட்சி ஊழியா்கள், காவல் துறையினா், பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

நெய்வேலியில்... பண்ருட்டி முக்கியச் சாலைகளில் புதன்கிழமை காலை இரு சக்கர வாகனங்களில் பலா் சென்று வந்தனா். நேரம் செல்லச் செல்ல போலீஸாா் அவா்களைக் கட்டுப்படுத்தினா். சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, கடலூா் - சித்தூா் சாலை சந்திக்கும் பண்ருட்டி நகரின் மையப் பகுதியான நான்கு முனை சந்திப்பு, திருவதிகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் போலீஸாா் தடுப்புக் கட்டைகளை அமைத்து வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தினா். அத்தியாவசிய வாகனங்கள் செல்ல மட்டுமே அனுமதி அளித்தனா்.

ஊரடங்கு உத்தரவால் பண்ருட்டி, நெய்வேலி, வடலூா், குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள கடை வீதிகள் மற்றும் முக்கியச் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. காய்கறி, மருந்து, மளிகைக் கடைகள் மட்டும் திறந்திருந்தன. இந்தக் கடைகளிலும் மக்கள் கூட்டமின்றி காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT