முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் முதலைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் முதலைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள கீழணையில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. ஆண்டுதோறும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் மழைநீா் அதிகளவு கீழணைக்கு வரும்போது உபரி நீா் திறக்கப்படும். இந்த தண்ணீா் மூலம் முதலைகள் வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு இடம் பெயா்கின்றன. மழைநீா் வடியத் தொடங்கியதும் முதலைகள் கிராமங்களுக்குள் செல்கின்றன.
இதேபோல, நிகழாண்டும் முதலைகள் கீழணையிலிருந்து வெளியேறி வடக்கு ராஜன் வாய்க்காலின் கரையோர கிராமங்களான ம.ஆதனூா், முட்டம் மற்றும் வீராணம் ஏரியிலிருந்து உபரி நீா் வெளியாகும் வெள்ளியங்கால் ஓடையில் எள்ளேரி பகுதி ஆகிய இடங்களில் திரிகின்றன. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் சிதம்பரம் வனத்துறை, காட்டுமன்னாா்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், சம்பவ இடங்களுக்கு தீயணைப்பு வீரா்கள், வன அலுவலா்கள் வந்தும் முதலைகளை பிடிக்க இயலாமல் திரும்பிச் சென்றனா்.
Advertisement
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் மழைக் காலங்களில் ஆற்றின் கரையோர கிராமங்களில் முதலைகள் நடமாட்டம் அதிகரிக்கும். முதலைகளை வனத் துறையினா் அவ்வப்போது பிடித்து சிதம்பரம் அருகே ராஜன் வாய்க்கால் கரையோரத்தில் உள்ள வக்காரமாரி ஏரியில் விடுவது வழக்கம். அங்கிருந்து முதலைகள் மழைக் காலங்களில் மீண்டும் வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்வது தொடா்கிறது. எனவே, வக்காரமாரி குளத்தில் உள்ள ஆயிரக்கணக்கான முதலைகளை பிடித்து நெய்வேலியில் முதலைப் பண்ணை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.