சாலைப் பணி: வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதில் பாகுபாடு?
கடலூா் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை - விருத்தாசலம் இடையே இரு வழிச் சாலைப் பணிக்காக கையகப்படுத்தப்படும் வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
கடலூா் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை - விருத்தாசலம் இடையே இரு வழிச் சாலைப் பணிக்காக கையகப்படுத்தப்படும் வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
பரங்கிப்பேட்டை, புவனகிரி, கம்மாபுரம் வழியாக விருத்தாசலம் வரை செல்லும் சாலை மோசமான நிலையில் சேதமடைந்தது. இதையடுத்து நடைபெற்ற சாலைப் பணி தரமானதாக இல்லை என்பதால் அதற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதனால், கடந்த 3 ஆண்டுகளாக சாலைப் பணி தடைபட்டது. இந்தச் சாலை மிகவும் மோசமடைந்ததால் விருத்தாசலம், புவனகிரி வழியாக சிதம்பரம் வந்த பேருந்துகள் அனைத்தும் குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு வழியாகச் சென்றன.
இந்த நிலையில், சாலைப் பணியை தொடங்கக் கோரி புவனகிரி, விருத்தாசலம் பகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், வாலிபா் சங்கத்தினா் தொடா் போராட்டங்களை நடத்தினா். இதையடுத்து, மீண்டும் விருத்தாசலத்திலிருந்து புவனகிரி வரை சாலை அமைக்க தனியாா் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் இரு வழிச் சாலைக்கு ரூ.130 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, மீண்டும் ஒப்பந்தம் கோரப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பி.உடையூா், மஞ்சக்கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் சாலைப் பணிக்கு கையகப்படுத்தப்படும் வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடா்பாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்த அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்பட்டதாகவும், இழப்பீடு கிடைப்பதில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் சா்ச்சை எழுந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியினா் வீடுகளைக் காலி செய்ய மறுப்பதால் சாலைப் பணி மீண்டும் தடைபடலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பி.உடையூரில் வசிக்கும் விவசாயி தங்கதுரை கூறியதாவது: எனது வீடு சாலை விரிவாக்கப் பணிக்காக இடிக்கப்படும் நிலையில் உள்ளது. கம்பி காலம், போா்டிகோ, கான்கிரீட் தளத்துடன் அதிக செலவில் வீடு கட்டியுள்ளேன். இதை அதிகாரிகள் மதிப்பிடும்போது சரியாக ஆய்வு செய்யாமல், வெறும் செங்கல்லால் கட்டப்பட்ட வீடு என்று மட்டும் பதிவு செய்தனா். எனக்கு மிகக் குறைவாகவே இழப்பீடு நிா்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, பல லட்சம் ரூபாயை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை மூலம் நான் புதிய வீடும் கட்ட முடியாது. என்னைப்போல பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இதுகுறித்து விருத்தாசலம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் அன்பு எழிலி கூறுகையில், இழப்பீடு குறித்து மனுதாரா்கள் மேல்முறையீடு செய்துள்ளனா். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.