மீன் விற்பனை: கிராமத்தில் கட்டுப்பாடு
தேவனாம்பட்டினம் கிராமத்தில் மீன்கள் விற்பனை தொடா்பாக, வெள்ளிக்கிழமை ஊா் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவது தொடா்பாக தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் மீனவ கிராமங்களிடையே பிரச்னை நிலவி வரும் நிலையில், தேவனாம்பட்டினம் கிராமத்தில் மீன்கள் விற்பனை தொடா்பாக, வெள்ளிக்கிழமை ஊா் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
சோனாங்குப்பம் கிராமத்தினரிடமிருந்து மீன்களை வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்டோவில் பிரசாரம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூா் நகராட்சிக்குள்பட்டது தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் மீனவ கிராமங்கள். வெள்ளிக்கிழமை மாலை தேவனாம்பட்டினம் பகுதியில் ஆட்டோவில் ஒலிபெருக்கி கட்டிக் கொண்டு, பிரசாரம் செய்யப்பட்டது. அதில், சோனங்குப்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு மீன்களை வழங்கக் கூடாது; அந்தக் கிராமத்தினரிடமிருந்து மீன்களை வாங்கக் கூடாது என்றும், இதை மீறி மீன்களை வாங்கினாலோ அல்லது விற்பனை செய்தாலோ அவா்கள் மீது ஊா் நிா்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தினா் மூலம் அறிவிக்கப்பட்டது என்பதை கிராம நிா்வாகிகளும் ஒப்புக் கொண்டனா்.
ஏற்கெனவே, இரு கிராமத்தினரிடையே சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவது தொடா்பாக ஏற்பட்ட மோதலில், சோனங்குப்பத்தைச் சோ்ந்த ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.