கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கை
கடலூா் மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கை நடைபெற்றது.
கடலூா் மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கை நடைபெற்றது.
சிறுபான்மையினா் அல்லாத தனியாா் பள்ளிகளில் நலிவுற்ற பிரிவுகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு 25 சதவீதம் இடம் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவில் சேரும் மாணவ, மாணவிகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்.
இதன்படி, கடலூா் மாவட்டத்தில் 132 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகள் 230 என மொத்தம் 362 பள்ளிகளில் 5,824 இடங்களுக்கான சோ்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. சோ்க்கைக்காக இணைய தளம் மூலம் 8,980 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 7,763 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. 443 விண்ணப்பங்கள் தகுதியற்றவையாகவும், 754 விண்ணப்பங்கள் உரிய சான்று இணைக்கப்படாததாலும் நிராகரிக்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து வியாழக்கிழமை அனைத்து பள்ளிகளிலும் இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.
இதில், ஒதுக்கீட்டு அளவை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் குலுக்கல் முறையில் தோ்வு நடைபெற்றது. குலுக்கல் நடைபெற்ற பள்ளிகளுக்கு கல்வித் துறை சாா்பில் பாா்வையாளா்கள் அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டதாகவும், தோ்வானவா்கள் பட்டியலை அந்தந்தப் பள்ளியின் அறிவிப்புப் பலகையில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.