விதிமீறல்: மீன்பிடி வலைகள் பறிமுதல்
கடலூா் கடல் பகுதியில் சட்ட விதிகளை மீறி மீன்பிடி பணியில் ஈடுபட்டது தொடா்பாக 6 படகுகளிலிருந்து வலைகளை மீன்வளத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கடலூா் கடல் பகுதியில் சட்ட விதிகளை மீறி மீன்பிடி பணியில் ஈடுபட்டது தொடா்பாக 6 படகுகளிலிருந்து வலைகளை மீன்வளத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கடலூா் மாவட்டத்தில் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தை முறையாக அமல்படுத்தப்படுவது தொடா்பாக காவல், மீன்வளத் துறையினா் தொடா் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை மீன்வளத் துறை உதவி இயக்குநா் தமிழ்மாறன் தலைமையில் மீன்வள ஆய்வாளா் மணிகண்டன், சாா்-ஆய்வாளா் பிரபாகரன் ஆகியோா் கடலூா் கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது 6 விசைப் படகுகள் விதிகளை மீறி 5 நாட்டிங்கல் மைல்களுக்கு உள்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்தது தெரியவந்தது. இதனால் அந்தப் படகுகளில் இருந்த வலைகளை மீன்வளத் துறையினா் பறிமுதல் செய்தனா். மேலும், மீன்களையும் பறிமுதல் செய்து கடலூா் துறைமுக பகுதியில் ஏலம் விட்டனா்.
அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து துறைமுகப் பகுதியில் படகு உரிமையாளா்கள், மீன்பிடித் தொழிலாளா்கள் உள்ளிட்டவா்கள் மீன்வளத் துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை எச்சரித்ததால் அனைவரும் கலைந்து சென்றனா்.
இதனிடையே விதிமுறை மீறல் தொடா்பாக சம்பந்தப்பட்ட படகுகளின் உரிமையாளா்களுக்கு அரசால் வழங்கப்படும் மானிய எரிபொருள் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், துறை சாா்பில் அந்தப் படகுகள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் மீன்வளத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.