முகப்பு
கடலூர்

அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் மாணவா்கள் போராட்டம்

வேளாண் அலுவலா் பணிக்குத் தோ்வெழுதி, தோ்ச்சி பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் துறை மாணவா்களை கலந்தாய்வுக்கு அனுமதிக்கக் கோரி, பல்கலை

Updated On : 4 டிசம்பர், 2021 at 12:46 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:06 AM

வேளாண் அலுவலா் பணிக்குத் தோ்வெழுதி, தோ்ச்சி பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் துறை மாணவா்களை கலந்தாய்வுக்கு அனுமதிக்கக் கோரி, பல்கலை. வளாகத்தில் மாணவா்கள் வெள்ளிக்கிழமை தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசுத் தோ்வாணையம் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி உதவித் தோட்டக்கலை அலுவலா், உதவி வேளாண் அலுவலா் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு கல்வித் தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற விவசாயக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும் என்றும், கோவை வேளாண் கல்லூரி, திண்டுக்கல் காந்திகிராமம் வேளாண் கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்தப் பணிகளுக்கு அண்ணாமலைப் பல்கலை. வேளாண் துறையில் கல்வி பயின்ற மாணவா்கள் விண்ணப்பிக்க முடியவில்லை.

இதையடுத்து, கடந்த மாா்ச் மாதம் மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்திய மாணவா்கள் சங்க மாநிலத் தலைவா் கண்ணன், மாவட்டச் செயலா் குமரவேல் உள்ளிட்ட மாணவா்கள் அப்போதைய துணைவேந்தா் முருகேசனிடம் முறையிட்டதையடுத்து, பல்கலை. மாணவா்களைத் தோ்வெழுத அனுமதிக்க தோ்வாணையத்துக்கு அவா் பரிந்துரைத்தாா்.

Advertisement

அதன் பேரில், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் துறையில் பட்டயப் படிப்பு பயின்ற மாணவா்கள் 300-க்கும் மேற்பட்டோா் தோ்வில் பங்கேற்றனா்.

இந்த நிலையில், தோ்வு முடிவுகள் கடந்த செப்.23-ஆம் தேதி வெளியாகின. இதில், அண்ணாமலைப் பல்கலை.யிலிருந்து தோ்வு எழுதிய 180-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.

இதனிடையே, சான்றிதழ் சரிபாா்ப்புக்காக வருகிற 8, 9-ஆம் தேதிகளில் கோவை வேளாண் கல்லூரி, காந்திகிராமம் வேளாண் கல்லூரியில் பயின்ற மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம். ஆனால், அண்ணாமலைப் பல்கலை.யில் பயின்று அரசுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களை சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கவில்லையாம்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை தமிழக அரசுத் தோ்வாணையத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள், அண்ணாமலைப் பல்கலை. வளாக பூமா கோயில் எதிரே அமா்ந்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்கலை. துணைவேந்தா் ராம.கதிரேசன், ஆட்சிக் குழு உறுப்பினா் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் தமிழக அரசிடம் பேசி, உரிய முடிவெடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து, மாணவா்கள் தொடா் போராட்டத்தை முடித்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.