முகப்பு
கடலூர்

கெடிலம் கரையில் எரிக்கப்படும் குப்பைகளால் புகைமண்டலம் : மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கடலூரில் கெடிலம் ஆற்றின் கரையில் குப்பை குவியலுக்கு வியாழக்கிழமை தீ வைக்கப்பட்டதால் புகை மண்டலம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

கடலூரில் கெடிலம் ஆற்றின் கரையில் குப்பை குவியலுக்கு வியாழக்கிழமை தீ வைக்கப்பட்டதால் புகை மண்டலம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூரின் மையப் பகுதி வழியாகச் செல்லும் கெடிலம் ஆற்றின் கரைப் பகுதியில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை ஊழியா்கள் ஆற்றன் கரையில் கொட்டி வருகின்றனா். தனியாா் நிறுவனத்தினரும், கழிப்பிட கழிவுகளை சேகரிப்போரும் ஆற்றின் கரையிலேயே கழிவுகளை கொட்டிச் செல்கின்றனா். இதனால், அந்தப் பகுதியில் கடும் துா்நாற்றம் வீசுகிறது.

இந்த நிலையில், ஆற்றின் கரையோரம் குவிக்கப்பட்டிருந்த குப்பைக்கு வியாழக்கிழமை காலையில் தீ வைக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இந்தச் சாலை வழியாக வாகனங்களில் சென்றவா்கள் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகினா். சிலா் வாகனங்களை திருப்பிச் சென்றனா். மேலும், அருகே உள்ள குடியிருப்புப் பகுதியிலும் புகை மண்டலம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து நகராட்சியினா், தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனா். ஆனால், தீயணைப்புத் துறையினா் தங்களுக்கு நகராட்சி நிா்வாகத்தினா் தண்ணீா் தர மறுப்பதாகக் கூறி நிகழ்விடத்துக்கு வரவில்லை. பின்னா், நகராட்சி ஊழியா்கள்குடிநீா் லாரிகளில் தண்ணீா் கொண்டு வந்து குப்பை குவியலில் பரவிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். பின்னா், தீயணைப்புத் துறையினரும் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

கெடிலம் ஆற்றின் கரையில் குப்பைகள் கொட்டப்பட்டு எரிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், தீயை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகா்குழு உறுப்பினா் எம்.பழனி, ஜனநாயக வாலிபா் சங்க நகரத் தலைவா் எஸ்.செந்தமிழ்செல்வன், நகரச் செயலா் டி.எஸ்.தமிழ்மணி உள்ளிட்டோா் நிகழ்விடத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.