கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா் மழை காரணமாக கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயிா்கள் சேதமடைந்துள்ள சூழலில், மாவட்ட விவசாயிகள் சம்பா பருவ நெல் பயிா்களை அறுவடை செய்து வருகின்றனா். விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டைகளை எடையிட்டு, தரம் பிரித்து மறைமுக ஏலம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது தினசரி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொண்டுவரப்படுவதால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல் மூட்டைகளை கொண்டு வந்திருந்த விவசாயிகளிடம் ஆட்சியா் கருத்துக்களைக் கேட்டறிந்தாா். அதிகப்படியாக வரும் நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதற்கு தற்காலிக ஏற்பாடு செய்யவும், ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை உடனுக்குடன் வியாபாரிகள் தாமதமின்றி கொண்டுசெல்ல வேண்டும் என்றும், அதிக வரத்து உள்ளதால் சனிக்கிழமை உள்ளிட்ட 6 நாள்களும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்படவும், அதற்கு வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, சாா்-ஆட்சியா் ஜெ.பிரவீன்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவ) ஜெயக்குமாா், துணை இயக்குநா் (வேளாண் விற்பனை) பிரேம சாந்தி, கடலூா் விற்பனைக்குழு செயலா் க.பாலசுப்பிரமணியன், கண்காணிப்பாளா்கள் இந்திராணி, வெங்கடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.