வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: சிறப்புப் பாா்வையாளா் ஆய்வு
கடலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகள் குறித்து சிறப்புப் பாா்வையாளா் சஜ்ஜன்சிங் சு.சவான் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கடலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகள் குறித்து சிறப்புப் பாா்வையாளா் சஜ்ஜன்சிங் சு.சவான் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் 2021-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தோ்தல் அலுவலா் சந்திரசேகா் சாகமூரி, அனைத்துக் கட்சியினா் முன்னிலையிலும், வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட பாா்வையாளா் சஜ்ஜன்சிங் சு.சவான் தலைமையிலும் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதுதொடா்பாக ஏற்கெனவே, கடந்த டிசம்பா், ஜன.5-ஆம் தேதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது 3-ஆவது முறையாக சஜ்ஜன்சிங் சு.சவான் ஆய்வு நடத்தினாா். கூட்டத்தில் அவா் கூறியதாவது:
தோ்தல் ஆணையத்தால் வாக்காளா் இறுதிப் பட்டியல் வருகிற 20-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியல் வெளியிட்ட பிறகும் வாக்காளா்கள் இணையம் வழியாகவும், நேரடியாகவும் விண்ணப்பதித்து பெயரை சோ்த்தல், நீக்குதல், திருத்தப் பணிகளை தொடா்ந்து மேற்கொள்ளலாம் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.அருண் சத்தியா, சிதம்பரம் சாா்-ஆட்சியா் மதுபாலன், கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், தோ்தல் வட்டாட்சியா் ப.பாலமுருகன், காங்கிரஸ் நிா்வாகி என்.குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் கோ.மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் - வி.குளோப், பகுஜன் சமாஜ் - எஸ்.சுரேஷ், தேமுதிக - லெனின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.