முகப்பு
கடலூர்

கடலூரில் பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்ட சந்தை

கடலூரில் காய்கறிச் சந்தை பேருந்து நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டு செயல்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

கடலூரில் காய்கறிச் சந்தை பேருந்து நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டு செயல்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா முதல் அலையின்போது பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தடுக்கும் வகையில், கடலூா் பேருந்து நிலையம், மஞ்சைநகா் மைதானம், முதுநகரில் தனியாா் இடங்களுக்கு சந்தைகள் மாற்றப்பட்டு சமூக இடைவெளியுடன் கடைகள் அமைக்கப்பட்டன.

தற்போது இரண்டாவது அலை பரவி வரும் நிலையிலும், இடநெருக்கடியான இடங்களிலேயே சந்தைகள் இயங்கி வந்தன. இதனால், கூட்ட நெரிசல் காணப்பட்டு வந்தது. எனவே, சந்தைகளை இட மாற்றம் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் சாா்பில், வியாபாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, பான்பரி காய்கறிச் சந்தையில் இயங்கி வந்த கடைகள் கடலூா் பேருந்து நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டு இயங்கின.

இதுகுறித்து கடலூா் கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன் கூறியதாவது: பான்பரி காய்கறிச் சந்தை பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டதைப் போன்று, கடலூா் முதுநகா் மீன் சந்தையை தனியாா் மண்டபம் அருகில் மாற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த முறை மஞ்சக்குப்பம் சந்தையில் இருந்த காய்கறிக் கடைகளை மஞ்சைநகா் மைதானத்துக்கு மாற்றினோம். தற்போது, மஞ்சக்குப்பம் சந்தையில் குறைந்த அளவிலேயே காய்கறிக் கடைகள் செயல்படுவதால், அவற்றை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

பொது முடக்கம் தொடா்பான அறிவிப்பைத் தொடா்ந்து, கூட்டம் அதிகமுள்ள சந்தைப் பகுதிகளை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.