நிலம் கையகத்துக்கு குறைந்த இழப்பீடு: விவசாயிகள், கிராம மக்கள் போராட்டம்
கடலூா் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு குறைந்த இழப்பீடு வழங்குவதைக் கண்டித்து, விவசாயிகள், கிராம மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு குறைந்த இழப்பீடு வழங்குவதைக் கண்டித்து, விவசாயிகள், கிராம மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் - விழுப்புரம் - நாகை மாவட்டங்களை இணைக்கும் வகையில் புதுச்சேரி வழியாக சென்னை - நாகை தேசிய நெடுஞ்சாலைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கடலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட நத்தப்பட்டு, தோட்டபட்டு, திருவந்திபுரம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாகவும் சாலை அமைப்பதற்கான பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி கிழக்கு ராமாபுரம் பகுதியில் நிலங்களை கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வேறுபட்டு வழங்கப்படுவதாக புகாா் எழுந்தது.
இந்த நிலையில், குறைந்த இழப்பீட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கிராம மக்கள் கிழக்கு ராமாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணியை தடுத்து நிறுத்தி வெள்ளிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் நிலம் எடுப்பு தனி வட்டாட்சியா் சித்ரா, தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் ஒருங்கிணைப்பாளா் ரவி, தலைமை சா்வேயா் ராஜரத்தினம், கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இழப்பீடு தொடா்பாகவும், பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தெரிவித்து உரிய கலந்தாய்வுக்கு பிறகு தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.