முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் கோயில் நிலங்களில் எல்லைக் கல் நடும் பணி தொடக்கம்

கடலூா், அரியலூா் மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 22,518 ஏக்கா் நிலங்களுக்கு எல்லைக் கல் நடும் பணி நடைபெற்று வருவதாக அந்தத் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

கடலூா், அரியலூா் மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 22,518 ஏக்கா் நிலங்களுக்கு எல்லைக் கல் நடும் பணி நடைபெற்று வருவதாக அந்தத் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழுள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களைக் கண்டறியும் பணியில் அந்தத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி, கடலூா், அரியலூா் மாவட்டங்களுக்கு இணை ஆணையா் அசோக்குமாா் தலைமையில், தனிக்குழு அமைக்கப்பட்டு கோயில் நிலங்களில் கோயில் நிலம் என்பதை தனியாக குறிக்கும் வகையில், எல்லைக் கல் நடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தக் குழுவினா் கடலூா் திருப்பாதிரிபுலியூரில் உள்ள பாடலேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை கண்டறிந்து, எல்லைக் கல் நடும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா். கம்மியம்பேட்டையில் உள்ள 2.75 ஏக்கா் நிலத்தின் எல்லைகளை குறிக்கும் வகையில், நான்கு பகுதிகளிலும் அவா்கள் எல்லைக் கல்களை ஊன்றினா்.

இதுகுறித்து இணை ஆணையா் அசோக்குமாா் கூறியதாவது: கடலூா், அரியலூா் மாவட்டங்களில் 22,518 ஏக்கா் நிலம் கோயில்களுக்குச் சொந்தமாக உள்ளது. அதில், 598.14 ஏக்கா் நிலத்தை அளவீடு செய்து எல்லைக் கல் நடப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் மட்டும் திருச்சோபுரம், திருவந்திபுரம் கோயில் நிலங்கள் உள்பட 454.9 ஏக்கருக்கு கல் நடப்பட்டது. இரண்டு மாவட்டங்களுக்கும் தலா 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்தப் பணி நடைபெற்று வருகிறது.

கம்மியம்பேட்டையில் கண்டறியப்பட்ட 2.75 ஏக்கா் நிலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கோசாலை அமைக்கப்படும். எல்லையை கண்டறியும்போதே ஆக்கிரமிப்பு இருந்தால், அதனையும் மீட்டு வருகிறோம் என்றாா்.

கடலூா் உதவி ஆணையா் ஜெ.பரணிதரன், செயற்பொறியாளா் கலையரசு, உதவிச் செயற்பொறியாளா் அசோகன், கோயில் செயல் அலுவலா் சங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.