முகப்பு
கடலூர்

குப்பைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம் விற்பனை

குப்பைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உர விற்பனை கடலூரில் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

குப்பைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உர விற்பனை கடலூரில் வியாழக்கிழமை தொடங்கியது.

கடலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறையின் சாா்பில், தூய்மைப் பாரத இயக்கத் திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் நுண்ணுயிா் உர விற்பனையை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

இயற்கை உரங்களைத் தயாரிக்க, வடக்குத்து, சிதம்பரம் ‘நான்-முனிசிபல்’, கீரப்பாளையம், ஊ.கொத்தங்குடி, கருவேப்பிலங்குறிச்சி, வேப்பூா், இராமநத்தம் ஆகிய 7 ஊராட்சிகளில் தலா ரூ.20 லட்சத்தில் நுண்ணுயிா் உரக் கூடங்கள் தொடங்கியுள்ளன.

குப்பைகள், கழிவுகளை தூய்மைப் பணியாளா்கள் மூலம் சேகரித்து, மையங்களில் உள்ள கொள்கலன்களில் இயற்கை உரம் தயாா் செய்யப்படுகிறது. இந்த உரம் ஒரு கிலோ ரூ.10 வீதம் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், தோட்டக்கலைத் துறைக்கு 2 உரக் கூடங்களில் இருந்து தலா 250 கிலோ வீதம் இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டது. இதற்கான தொகை பெறப்பட்டு சம்பந்தப்பட்ட ஊராட்சிகளின் வங்கி கணக்கில் ஈடு செய்ய ஆவன செய்யப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், தோட்டக் கலை துணை இயக்குநா் (பொ) அருண், செயற்பொறியாளா் தணிகாச்சலம், உதவி இயக்குநா் (பயிற்சி) ஆ.விசாலாட்சி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் ரா.ச.வேலுமணி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் செல்லமுத்து, பத்மசுந்தரி உமாநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.