முகப்பு
கடலூர்

நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?

கடலூா் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடைப் பணி நடைபெற்று வரும் நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாகத் திறக்கப்படுமா என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடைப் பணி நடைபெற்று வரும் நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாகத் திறக்கப்படுமா என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் காவிரி டெல்டா, டெல்டா அல்லாத பகுதிகளில் சம்பா பருவத்தில் சுமாா் 3 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடைப் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முழுமையாகத் திறக்கப்படாததால் விவசாயிகள் வேறு வழியின்றி குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை தனியாருக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து வெலிங்டன் நீா்த் தேக்க பாசன விவசாயிகள் சங்கச் செயலா் ஆா்.சோமசுந்தரம் கூறியதாவது: சன்ன ரக நெல்லுக்கு அரசின் விலையாக கிலோவுக்கு ரூ.19.60-ம், ஊக்கத் தொகையாக குவிண்டாலுக்கு ரூ.100 அதாவது கிலோவுக்கு ரூ.1 வீதம் வழங்கப்படுகிறது. இதுவே மோட்டா ரகத்துக்கு அரசு விலையாக குவிண்டாலுக்கு ரூ.1,940, ஊக்கத் தொகையாக ரூ.75 வழங்கப்படுகிறது.

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் திட்டக்குடி, டெல்டா பகுதிகளில் 78 கிலோ கொண்ட மோட்டா ரக நெல் மூட்டை ரூ.ஆயிரத்துக்கு விலை பேசப்படுகிறது. அதாவது, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 78 கிலோ நெல் விற்பனை செய்தால் விவசாயிக்கு ரூ.1,513 கிடைக்கும் நிலையில், தனியாருக்கு விற்பனை செய்வதால் ரூ.513 வரை குறைவாக கிடைக்கிறது. எனவே, நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும்.

கடந்த ஆண்டு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்ட பெண்ணாடம், காா்மாங்குடி உள்பட அனைத்துப் பகுதிகளிலும் விடுபடாமல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். தற்போது பருவகால பட்டியல் எழுத்தா்கள் லாரிக்கு மாமூலாக மூட்டைக்கு ரூ.10 வழங்க வேண்டும் என்று கேட்கிறாா்கள். இதுகுறித்து ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து தமிழக அரசின் நுகா்பொருள் வாணிபக் கழக பொது மேலாளா் விஸ்வநாதன் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் 161 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க உத்தரவாகியுள்ளது. இதுவரை பாதிக்கு மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து, 5 நாள்கள் விடுமுறை வந்ததால் இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டது. அடுத்த ஓரிரு நாள்களில் மீதமுள்ள நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டுவிடும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.