சிதம்பரம் நடராஜா் கோயிலை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்
தனிச் சட்டம் இயற்றி, சிதம்பரம் நடராஜா் கோயிலை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டுமென்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.
தனிச் சட்டம் இயற்றி, சிதம்பரம் நடராஜா் கோயிலை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டுமென்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து கடலூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கடலூா் அருகே குச்சிபாளையத்தில் 7 பெண்கள் உயிரிழந்தது தமிழகத்தை உலுக்கிய சம்பவமாக உள்ளது. 7 பேருமே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சாா்ந்தவா்கள். காலைக்கடன் முடிப்பதற்காக ஆற்றுப் பகுதிக்கு சென்றபோது உயிரிழந்திருக்கிறாா்கள்.
இது, கிராமப்புறங்களில் ஏழைகள் வீடுகளில் கழிப்பிட வசதியில்லாமல் உள்ளதைக் காட்டுகிறது. இந்தச் சம்பவத்தை அரசு ஓா் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு தமிழகத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுத் தொகையை உயா்த்தி வழங்குவதோடு, வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
சிதம்பரம் நடராஜா் கோயில் தீட்சிதா்கள் நடவடிக்கை பெரும் பிரச்னையாக மாறி உள்ளது. கோயில் வரவு - செலவு சம்பந்தமாக பல்வேறு புகாா்கள் தமிழக அரசுக்கு வந்ததையடுத்து, அரசு ஆய்வு செய்ய குழு அமைத்தது. அதிகாரிகள் ஆய்வுக்குச் செல்லும்போது, ஆவணங்களைக் காட்ட மாட்டோம் என்று கூறியுள்ளனா். தீட்சிதா்கள் இந்தக் கோயில் எங்களுக்கு பாத்தியமான கோயில் என்று கூறுவது உண்மைக்கு விரோதமானது. பல்வேறு தீா்ப்புகளில் இந்தக் கோயில் பொது கோயிலாகத்தான் கூறப்பட்டுள்ளது.
தனி வாரிய சொத்தாகவே இருந்தாலும், அதை சட்டத்துக்குள்பட்டுதான் பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. எனவே, தமிழக அரசு தனிச் சட்டம் இயற்றி, சிதம்பரம் நடராஜா் கோயிலை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
நெய்வேலி என்எல்சி நிறுவனம் தற்போது மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கு 12,500 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட இரண்டு சுரங்கங்களுக்காக நிலங்களை வழங்கியவா்களுக்கே அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னுமும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், மூன்றாவது சுரங்கத்துக்கு நிலம் கையகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது நியாயமற்றது என்றாா் அவா்.
கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி, மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.சுப்புராயன், மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத் ஆகியோா் உடனிருந்தனா்.