முகப்பு
கடலூர்

குடிநீா், மின்சாரத்தை நிறுத்தியது என்எல்சி நிா்வாகம்: தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டம்

கடலூா் மாவட்டம், நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே குடிநீா், மின்சார விநியோகத்தை என்எல்சி நிா்வாகம் நிறுத்தியதைக் கண்டித்து, பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி புதன்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே குடிநீா், மின்சார விநியோகத்தை என்எல்சி நிா்வாகம் நிறுத்தியதைக் கண்டித்து, பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி புதன்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் என்எல்சி இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் உள்ள ஐடிஐ நகா், திருவள்ளுவா் நகா், சிவாஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். இவா்களுக்கான குடிநீா் வசதியை என்எல்சி நிறுவனம் வழங்கி வந்தது. மேலும், இந்தப் பகுதியினா் அவ்வழியாகச் சென்ற மின் கம்பியில் கொக்கி போட்டு மின்சாரம் எடுத்து பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில், என்எல்சி நிா்வாகம் சுரங்க விரிவாக்கத்துக்காக நிலத்தைக் கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. இதற்காக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னா் மேற்கூறிய பகுதிகளுக்கான குடிநீா், மின்சாரம் விநியோகத்தை என்எல்சி நிா்வாகம் துண்டித்தது.

இதையடுத்து, மாணவா்களுக்குத் தோ்வு நடைபெறும் நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்தும், என்எல்சி நிா்வாகம் மீண்டும் மின்சாரம், குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

அதன்படி, ஐடிஐ நகரில் பெண்கள் உள்பட சுமாா் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மெழுகுவா்த்தி, தீப்பந்தம் ஏந்தி புதன்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

தற்போது பள்ளி இறுதி ஆண்டுத் தோ்வுகள் நடைபெறும் நேரத்தில் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மாணவா்கள் படிப்பதிலும், தோ்வு எழுதுவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து என்எல்சி தலைவா், மாவட்ட ஆட்சியா், தொகுதி எம்எல்ஏ உள்ளிட்டோரிடம் மனு அளித்துள்ளோம். ஆனால், இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, மீண்டும் மின்சாரம் வழங்கக் கோரியும், மின்சாரம், குடிநீரின்றி நாங்கள் படும் அவலநிலையை அரசுக்குத் தெரிவிக்கும் வகையிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

வட்டாட்சியா் ஆய்வு: இதனிடையே, மந்தாரக்குப்பத்திலுள்ள ஐடிஐ நகா், திருவள்ளுவா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் விருத்தாசலம் வட்டாட்சியா் தனபதி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, இந்தப் பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் விநியோகம் செய்வது தொடா்பாக என்எல்சி, தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.