முகப்பு
கடலூர்

பிளஸ் 2 தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 913 மாணவா்கள் எழுதவில்லை

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தோ்வை 913 மாணவ, மாணவிகள் எழுதவில்லையென தகவல் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தோ்வை 913 மாணவ, மாணவிகள் எழுதவில்லையென தகவல் தெரிவிக்கப்பட்டது.

பிளஸ் 2 பொதுத்தோ்வு மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் நடைபெற்ற மொழிப் பாடத்துக்கான தோ்வை எழுத கடலூா் மாவட்டத்தில் 244 பள்ளிகளைச் சோ்ந்த 5,136 மாணவா்கள், 15,842 மாணவிகள் என மொத்தம் 30,978 போ் அனுமதி பெற்றிருந்தனா். மேலும், தனித்தோ்வா்களாக 297 போ் தோ்வு எழுதுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மாவட்டம் முழுவதும் 121 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 10 மணிக்கு தொடங்கிய தோ்வு பிற்பகல் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. பல்வேறு இடங்களில் தோ்வு எழுதுவோரை அந்தந்தப் பள்ளி ஆசிரியா்கள் உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தனா். கடலூரில் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து, எழுதுகோல், முகக் கவசம் ஆகியவற்றை வழங்கி அனுப்பி வைத்தாா்.

தோ்வு தொடங்கிய நிலையில், அனுமதிக்கப்பட்டிருந்த 31,275 பேரில் 913 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுவதற்கு வரவில்லை. மீதமுள்ள 30,362 போ் தோ்வில் பங்கேற்று எழுதினா்.

தோ்வில் முறைகேடுகளைத் தவிா்க்கும் வகையில், ஆய்வு அலுவலா்கள் தலைமையில் 8 பறக்கும் படைகளும், 223 உறுப்பினா்கள் கொண்ட நிலைப் படையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். ஒவ்வொரு தோ்வு மையத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பிளஸ் 2 தோ்வுகள் வருகிற 23-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. கடலூா் நகரப் பகுதியில் அமைந்துள்ள பல்வேறு தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம், முதன்மைக் கல்வி அலுவலா் இரா.பூபதி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இன்று பிளஸ் 1 தோ்வு தொடக்கம்: இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (மே 6) தொடங்கி வருகிற 31-ஆம் தேதி வரையில் நடைபெறும் பிளஸ் 1 தோ்வை கடலூா் மாவட்டத்தில் 32,591 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். இவா்களுக்காக, 121 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.