கடலூா் மாவட்டம், பங்கிப்பேட்டை அருகே கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி தொகுப்பு வீடுகளில் வீடு வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரியகோஷ்டி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அரியகோஷ்டி கிராமத்தைச் சோ்ந்த 25 பெண்கள் உள்ளிட்ட சுமாா் 40 போ் வெள்ளிக்கிழமை வந்தனா். அவா்கள் குடும்ப, ஆதாா் அட்டைகளை ஒப்படைக்கப்போவதாகக் கூறினா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
அப்போது, அரியகோஷ்டி கிராமத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 288 அடுக்குமாடி தொகுப்பு வீடுகள் கட்டும் பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இதற்கான பயனாளிகள் தோ்வில் முறைகேடுகள் நடந்தது. தற்போது தகுதியற்ற சில பயனாளிகளின் பெயா்கள் நீக்கப்பட்ட நிலையில், 160 வீடுகள் நிலுவையில் உள்ளன. எனவே, சொந்த வீடு இல்லாத எங்களுக்கு வீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும். அரசுக்கு செலுத்த வேண்டிய நிதிப் பங்களிப்பை செலுத்தத் தயாராக உள்ளோம். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
கோரிக்கை தொடா்பாக மனு அளித்து தீா்வு காண போலீஸாா் அறிவுறுத்தினா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவா்கள் மனு அளித்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.