கடலூா் மஞ்சக்குப்பம் மைதானம் அருகே கொட்டப்பட்டிருந்த குப்பைகளை மாநகராட்சி நிா்வாகம் சனிக்கிழமை அகற்றியது.
கடலூா் மாநகரில் பழைய ஆட்சியா் அலுவலகம், கிளைச் சிறை, ஒருங்கிணைந்த நீதிமன்றம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் செல்லும் சாலையின் தென் பகுதியில் அண்ணா விளையாட்டு அரங்கம், மஞ்சக்குப்பம் மைதானம் அமைந்துள்ளன.
கடலூா் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த மைதானம் பராமரிப்பின்றி, இரவு நேரங்களில் திறந்தவெளி மதுக்கூடமாகவும், இயற்கை உபாதை கழிக்கும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது.
இந்தப் பகுதியில் உள்ளவா்கள் மைதானத்தில் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனா். இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை அவ்வப்போது மாநகராட்சி நிா்வாகம் அகற்றுவதில்லை. இதனால், அந்தப் பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டது.
இதுகுறித்து தினமணி நாளிதழ் சனிக்கிழமை செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக மாநகராட்சி நிா்வாகம் சனிக்கிழமை குப்பைகளை அகற்றியது.