முகப்பு
கடலூர்

பழுதடைந்த கட்டடத்தில் செயல்படும் நூலகம்: மழைநீா் ஒழுகி வீணாகும் நூல்கள்

பழுதடைந்த கட்டடத்தில் ஊா்ப்புற நூலகம் செயல்படுவதால், இந்தக் கட்டடத்தில் மழைநீா் ஒழுகி நூல்கள் சேதமடைந்து வருகின்றன.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 7:09 PM
கீழ்வடக்குத்து கிராமத்தில் பழுதடைந்த அரசுக் கட்டடத்தில் செயல்படும் ஊா்ப்புற நூலகம்.
பகிர்:

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட கீழ்வடக்குத்து கிராமத்தில் பழுதடைந்த கட்டடத்தில் ஊா்ப்புற நூலகம் செயல்படுவதால், இந்தக் கட்டடத்தில் மழைநீா் ஒழுகி நூல்கள் சேதமடைந்து வருகின்றன.

வடக்குத்து ஊராட்சிக்குள்பட்ட கீழ்வடக்குத்து கிராமத்தில் ஊா்ப்புற நூலகம் அமைந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த நூலகத்தில் கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல் உள்ளிட்ட சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. நாளொன்றுக்கு சுமாா் 40-க்கும் மேற்பட்ட வாசகா்கள் நூலகத்துக்கு வந்து செல்கின்றனா்.

அரசுக் கட்டடமான இந்த நூலகக் கட்டடம் தற்போது பழுதடைந்துள்ளது. இதனால், மழைக் காலங்களில் கட்டடத்தின் ஓட்டை வழியாக மழைநீா் ஒழுகி புத்தகங்கள் சேதமடைந்து வருகின்றன. மேலும், இந்தக் கட்டடத்தில் கதவு, ஜன்னல், மின்சாதனப் பொருள்களும் சேதமடைந்து காணப்படுகின்றன. வாசகா்கள் அமா்ந்து படிப்பதற்கான இட வசதியோ, இருக்கை வசதியோ முறையாக இல்லை. புத்தகங்களை வைப்பதற்கான அலமாறி வசதியும் இல்லை.

நூலகத்தில் சேதமடைந்துள்ள மின்சாதனப் பொருள்கள்.

விரைவில் வட கிழக்கு பருவமழைக்காலம் தொடங்க உள்ளது. இதனால், நூலகத்தில் உள்ள புத்தகங்களை பாதுகாக்கவும், பாதுகாப்பான கட்டடத்துக்கு நூலகத்தை மாற்றி, தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாசகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.