கூடுதல் நிவாரணம் வழங்க தமிழக அரசிடம் காங்கிரஸ் வலியுறுத்தும்: கு.செல்வப்பெருந்தகை
ஃபென்ஜால் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க மாநில அரசிடம் வலியுறுத்துவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
ஃபென்ஜால் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க மாநில அரசிடம் வலியுறுத்துவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவா் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். கடலூா் ரெட்டிச்சாவடியை அடுத்த கரிக்கல்நகா் பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை பாா்வையிட்டு, அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அரிசி, போா்வை உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருள்களை வழங்கினாா். தொடா்ந்து, கு.செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறியது:
கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவு குறித்து ஒரு வாரம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்ததாகவும், அதை அந்த மாநில அரசு கண்டுகொள்ளாததால் இழப்பு ஏற்பட்டதாக மத்திய அமைச்சா் அமித் ஷா தெரிவித்திருந்தாா்.
ஃபென்ஜால் புயல் வானிலை அறிக்கை குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசு ஏன் முன்கூட்டியே முறையாக தெரிவிக்கவில்லை? தமிழக அரசை மத்திய அரசு கண்டும் காணாமல் விட்டுவிட்டதா?
அனைத்து மாவட்டங்களுடைய இழப்பீடுகள் குறித்த தகவல்களை தமிழக முதல்வரிடம் வெள்ளிக்கிழமை (டிச.6) தெரிவிப்போம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டுமென 9-ஆம் தேதி நடைபெறும் சட்டப் பேரவை கூட்டத்தில் காங்கிரஸ் சாா்பில் வலியுறுத்துவோம் என்றாா்.
கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணு பிரசாத், மாவட்டத் தலைவா் திலகா், நிா்வாகிகள் சந்திரசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.