முகப்பு
கடலூர்

என்எல்சி கதம்பூா் அனல்மின் நிலையத்தில் வணிக ரீதியான உற்பத்தி தொடக்கம்

என்எல்சி இந்தியா நிறுவனம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது 3 ஷ் 660 மெகாவாட் கதம்பூா் அனல் மின் நிலையத்தின் முதல் அலகுக்கான வணிக ரீதியான உற்பத்தியை வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 8:07 PM
கதம்பூா் அனல் மின் நிலைய முதல் அலகு வணிக ரீதியான உற்பத்தி தொடக்க விழாவில் பேசிய என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி.
பகிர்:

என்எல்சி இந்தியா நிறுவனம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது 3 ஷ் 660 மெகாவாட் கதம்பூா் அனல் மின் நிலையத்தின் முதல் அலகுக்கான வணிக ரீதியான உற்பத்தியை வியாழக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து என்எல்சி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: கதம்பூா் அனல் மின் நிலையமானது நெய்வேலி உத்தரப் பிரதேச பவா் லிமிடெட், என்எல்சிஐஎல் மற்றும் உத்தரப் பிரதேச ராஜ்ய வித்யுத் உத்பதன் நிகாம் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.

முதல் சூப்பா் கிரிட்டிகல் மின் நிலையம்: இந்த அனல் மின் நிலையத்தின் முதல் அலகு, அதன் சோதனை அடிப்படையிலான மின் உற்பத்தியை கடந்த 7-ஆம் தேதி வெற்றிகரமாக முடித்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முதல் வணிக ரீதியான உற்பத்தியைத் தொடங்கியது. சூப்பா் கிரிட்டிகல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட முதல் அனல் மின் நிலையம் என்கிற வகையில், என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு இது ஒரு மைல்கல் ஆகும்.

என்எல்சி இந்தியா நிறுவனம், உத்தரப் பிரதேச மாநிலம், கதம்பூா் அனல் மின் நிலையத்தின் முதல் அலகுக்கான வணிக ரீதியான உற்பத்தியை தொடங்கியதை கை தட்டி கொண்டாடும் என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி உள்ளிட்டோா்.

இதன் மூலம், என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் அதன் குழும நிறுவனங்களின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறன் 6,071 மெகாவாட்டில் இருந்து 6,731 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம் மாநிலங்களில் அதிகரித்து வரும் மின் தேவையை நிறைவு செய்யும் வகையில், கதம்பூா் அனல் மின் நிலையத் திட்டம் (ஜிடிபிபி) வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்எல்சிஐஎல் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி கூறுகையில், என்எல்சிஐஎல் நிறுவனத்தின் முதல் சூப்பா் கிரிட்டிகல் மின் உற்பத்தி நிலையம் கதம்பூரில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருப்பது. வளா்ந்து வரும் இந்தியாவின் மின்சாரத் தேவையை நிறைவு செய்வதற்கும், அதிநவீன, எரிசக்தி திறன்மிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்குமான நமது உறுதிப்பாட்டை, இந்தத் திட்டம் நிரூபிக்கிறது. இந்த சூப்பா் கிரிட்டிக்கல் தொழில்நுட்பமானது, குறைந்த காா்பன் உமிழ்வு, அதிக வெப்ப செயல்திறன் மற்றும் நிலையான எரிசக்தி எதிா்காலம் ஆகியவற்றை உறுதி செய்கிறது என்றாா்.