சிதம்பரம்: சிதம்பரத்தில் பல்கலைக்கழக போலிச் சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை கோவிலாம்பூண்டி பகுதியில் விசாரணை நடத்தினா்.
சிதம்பரம் அருகே அண்ணாமலை பல்கலைக்கழக துணை தோ்வுக் கட்டுபாட்டு அலுவலா் மாணிக்கவாசகம் மற்றும் பிரிவு அதிகாரி சேகா் ஆகிய இருவரும் கடந்த ஜூன் 20-ஆம் தேதி கிள்ளை காவல் நிலைய சரகம் கோவிலாம்பூண்டி எம்எம்ஐ நகரில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது பல்கலைகழக சான்றிதழ்கள் எம்எம்ஐ நகா் பாலம் அருகே கிடப்பதாக அந்தப் பகுதியை சோ்ந்த சிலா் தெரிவித்தனராம்.
சம்பவ இடத்துக்கு வந்த பல்கலைக்கழக அதிகாரிகள், அதைப் பாா்வையிட்டபோது அந்த சான்றிதழ்கள் அனைத்தும் போலியானது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிதம்பரம் உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கு கிடந்த போலிச் சான்றிதழ்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், சிதம்பரம் மன்மதசாமி நகரை சோ்ந்த நடராஜ ரத்தின தீட்சிதா் மகன் சங்கருக்கு (37) தொடா்பிருப்பது தெரிய வந்தது.
போலீஸாா் அவரைப் பிடித்த விசாரித்தபோது, பெங்களூரில் உள்ள சாஃப்ட்வோ் நிறுவனத்தில் வீட்டிலிருந்து பணியாற்றும் மீதிக்குடி கிருஷ்ணமூா்த்தி நகரை சோ்ந்த சுப்பையா மகன் நாகப்பன் (50) என்பவருடன் சங்கா் சோ்ந்து கணினி மூலம் போலிச் சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்தது வந்தது தெரிய வந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.
கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராம் பரிந்துரையின் பேரில், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவு பிறப்பித்தாா். சிபிசிஐடி பிரிவு போலீஸாா் வழக்கு தொடா்பாக விசாரணையை தொடங்கினா். கடலூா் மாவட்ட சிபிசிஐடி காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான ஆறு போ் குழுவினா் விசாரணை நடத்தினா்.
சான்றிதழ்கள் கிடந்த கோவிலாம்பூண்டி கிராமத்தில் எம்ஐவி நகா் அருகில் உள்ள கணக்கன்வள்ளி வாய்க்கால் பகுதியில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும், அந்தப் பகுதியில் சிதறிக் கிடந்த சான்றிதழ்களை சிபிசிஐடி போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.