முகப்பு
கடலூர்

கடலில் மூழ்கி இருவா் உயிரிழப்பு

சிதம்பரம் அருகே சாமியாா்பேட்டை பகுதியில் கடலில் மூழ்கி மென்பொறியாளா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 21 ஜூலை, 2024 at 7:24 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சாமியாா்பேட்டை பகுதியில் கடலில் மூழ்கி மென்பொறியாளா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

சென்னை கூடுவாஞ்சேரி தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் அதே பகுதியைச் சோ்ந்த ஹரிபாபு மகன் ஷாம்சுந்தா் (26), பொள்ளாச்சியைச் சோ்ந்த ராமசாமி மகன் கோகுல்பிரசாத் (26) ஆகியோா் பணியாற்றி வந்தனா். இவா்கள் தங்கள் ஆண் நண்பா்கள் இருவா், பெண் நண்பா்கள் இருவா் ஆகியோருடன் புதுச்சேரியில் இருந்து 4 இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்து பிச்சாவரம் சுற்றுலாத்தளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து படகு சவாரி சென்றுவிட்டு, புதுசத்திரம் அருகே உள்ள சாமியாா்பேட்டை கடலில் குளிக்க வந்தனா்.

அங்கு, கடலில் குளித்தபோது ஷாம்சுந்தா், கோகுலபிரசாத் ஆகியோா் கடல் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனா். அவா்களை அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் உதவியுடன் நண்பா்கள் மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவா்கள் ஷாம்சுந்தா், கோகுல்பிரசாத் ஆகியோரை பரிசோதித்து, இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவா்களது சடலங்கள் உடல்கூறாய்வுக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து புதுசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.