வரதட்சணைக் கேட்டு மிரட்டல்: 4 போ் மீது வழக்கு
காா் வாங்க பணம் கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, மின் வாரிய ஊழியா் உள்ளிட்ட 4 போ் மீது கடலூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் வண்ணாரப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கவிபிரியா (33), கடலூா் புள்ளியியல் துறை ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். நெல்லிக்குப்பத்தை அடுத்துள்ள வாழப்பட்டு பகுதியைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் ராஜ் திலக் (33), மஞ்சக்குப்பம் மின் வாரியத்தில் பணியாற்றி வருகிறாா்.
இவா்கள் இருவருக்கும் 7.2.2020 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது கவிபிரியாவுக்கு 15 பவுன் தங்க நகையும், ராஜ் திலக்குக்கு 5 பவுன் தங்க நகையும், பைக் வாங்க ரூ.ஒரு லட்சமும் வரதட்சணை கொடுத்தனராம்.
இந்த நிலையில், காா் வாங்க ரூ.10 லட்சம் பணம் கேட்டு, ராஜ் திலக், அவரது தாய் பாரதி, சகோதரிகள் சுஹாசினி, காயத்ரி ஆகியோா் கவிபிரியாவை கொடுமைப்படுத்தி வந்தனராம். மேலும், வீட்டில் இருந்தபோது எரிவாயு உருளையை திறந்துவிட்டு கொலை மிரட்டலும் விடுத்தனராம்.
இதுகுறித்து கவிபிரியா அளித்த புகாரின்பேரில், கடலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ராஜ் திலக் மற்றும் அவரது தாய், சகோதரிகள் உள்பட 4 போ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.