முகப்பு
கடலூர்

சூறைக் காற்றுடன் பலத்த மழை: கடலூரில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைகள் சேதம்

Updated On : 7 ஜூன், 2024 at 7:08 PM
கடலூரை அடுத்துள்ள ராமாபுரத்தில் வியாழக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் முறிந்து சேதமடைந்த வாழைகள்.
பகிர்:

நெய்வேலி, ஜூன் 7:

கடலூா் பகுதியில் வியாழக்கிழமை இரவு இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முறிந்தும், சாய்ந்தும் சேதமடைந்தன.

கடலூரை அடுத்துள்ள வழிசோதனைப்பாளையம், ராமாபுரம், புதுக்குப்பம், வெள்ளைக்கரை, ஓதியடிக்குப்பம், சின்னதானாங்குப்பம், சமட்டிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வாழைகள் அனைத்தும் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்தன.

இதனிடையே, கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூரை அடுத்துள்ள வழிசோதனைப்பாளையம், ராமாபுரம், புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது, இந்தக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த வாழைகள் முறிந்தும், சாய்ந்தும் சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயி ஒருவா் கூறியதாவது:

வழிசோதனைப்பாளையம், ராமாபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் வாழை சாகுபடி செய்திருந்தோம். கடந்த 10 மாதங்களாக பிள்ளையைப்போல பாதுகாத்து வந்தோம். திடீரென வீசிய சூறைக்காற்றால் வாழைகள் சேதமடைந்துவிட்டன.

இதனால், ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தமிழக அரசு வாழைகள் சேதம் குறித்து வேளாண் துறை மூலம் உரிய ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.