297 எரிவாயு உருளைகள் பறிமுதல்
கடலூா் மாவட்டம், வேப்பூா், விருத்தாசலத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக 297 எரிவாயு உருளைகள், உபகரணங்களை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கடலூா் மாவட்டம், வேப்பூா், விருத்தாசலத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக 297 எரிவாயு உருளைகள், உபகரணங்களை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
வேப்பூா் வட்டாட்சியா் மணிகண்டன், வட்ட வழங்கல் அலுவலா் சாந்தி, வருவாய் ஆய்வாளா் ராஜவேல் ஆகியோா் வேப்பூா் வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆய்வு செய்தனா்.
அப்போது, வேப்பூா் ஆடலரசன் நகரில் தங்கியுள்ள ஸ்ரீமுஷ்ணத்தைச் சோ்ந்த காசிநாதன் மகன் சீதாராமன் (34), கோயில் இடத்தை ராஜேந்திரன் மனைவி விஜயலட்சுமியிடம் இருந்து வாடகைக்கு வாங்கி திறந்த வெளியில் அரசு அனுமதியின்றி, பாதுகாப்பில்லாமலும், சட்டத்துக்குப் புறம்பாகவும் வீட்டு உபயோக எரிவாயு உருளையில் இருக்கும் எரிவாயுவை, மோட்டா் உள்ளிட்ட உபகரணங்கள் உதவியுடன் வணிக ரீதியான எரிவாயு உருளையில் அடைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
அங்கிருந்த காலி எரிவாயு உருளைகள், நிரப்பப்பட்ட உருளைகள், எடை கருவி, எரிவாயு பரிமாற்றம் செய்யும் கருவிகள், வெல்டிங் மிஷன்கள், டிரில்லா் மிஷன் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினா்.
இதேபோல, அங்குள்ள சேலம் பிரதான சாலையில் வேப்பூரைச் சோ்ந்த மா.பழனிகுமாா் (52) துணை முகவரிடமிருந்து எரிவாயு உருளைகளைப் பெற்று விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. அங்கிருந்த எரிவாயு உருளைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இரு இடங்களிலும் சோ்த்து மொத்தம் 226 எரிவாயு உருளைகளை பூலாம்பாடி, கட்சிமைலூா் கிராமத்தில் உள்ள எரிவாயு முகவரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனா். மேலும், இதுதொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருத்தாசலம் வருவாய் ஆய்வாளா் ஜெயக்குமாா், வட்ட வழங்கல் அலுவலா் அனுசியா உள்ளிட்டோா் ஆலடி சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தினா். அப்போது, வீடு மற்றும் வணிக ரீதியான எரிவாயு உருளைகள் 71 இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கிருந்த கிடங்கில் எரிவாயு உருளைகளை வைத்து பூட்டி சீல் வைத்தனா்.