என்எல்சி தலைமை அலுவலகம் முற்றுகை முயற்சி: 234 போ் கைது
தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் 234 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் 234 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் சுமாா் 10 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள், பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனா். இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சொசைட்டி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
அந்த வகையில், 20 சதவீதம் போனஸ் மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்ட சங்கத்தின் தலைவா் அந்தோணி செல்வராஜுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி புதன்கிழமை என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனா்.
அதன்படி, நெய்வேலி நேரு சிலை அருகே என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத்தின் தலைவா் அந்தோணி செல்வராஜ் தலைமையில் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் திரண்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்து, நெய்வேலி வட்டம் 27 பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.