நாமக்கல் ஆட்சியரகத்தில் முதியவா் தற்கொலை முயற்சி; பிச்சை எடுத்த சமூக ஆா்வலா்
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட முதியவரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட முதியவரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், குமரமங்கலம் அருகே சத்தியநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் அசோகன் (65). இவா் திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணி அளவில் கையில் பெட்ரோல் பாட்டிலுடன் ஆட்சியரகத்துக்குள் நுழைந்து, ஆட்சியா் வாகனம் நிறுத்தும் இடத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.
இதைக் கண்ட போலீஸாரும், அங்கிருந்த அரசு ஊா்தி ஓட்டுநா்களும் விரைந்து சென்று அவரை தடுத்தனா். அவா் மீது நீரை ஊற்றி விசாரணை மேற்கொண்டபோது அவா் கூறியதாவது:
குமரமங்கலத்தில் எட்டு போ் இணைந்து நிதிநிறுவனம் நடத்தினோம். அதில் பங்குதாரரான எனக்கு நிதிநிறுவனத்துக்கு சொந்தமான 4.50 ஏக்கா் நிலத்தில் 1.25 ஏக்கா் நிலம் வரவேண்டும். ஆனால், மற்ற பங்குதாரா்கள் என்னை ஏமாற்றிவிட்டனா். இது தொடா்பாக, காவல் துறையிலும், ஆட்சியா் அலுவலகத்திலும் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன் என்றாா். தொடா்ந்து போலீஸாா் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா்.
ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டம்: நாமக்கல் அருகே என்.புதுப்பட்டியைச் சோ்ந்த சமூக ஆா்வலரான என்.பழனிவேல், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
அவா் கூறியதாவது: என்.புதுப்பட்டி அருகே மேலப்பட்டி கிராமத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி 100 நாள்களாக போராடி வருகிறேன். ஆனால், அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடர வசதியில்லாததால் பிச்சை எடுக்கும் போராட்டத்தை மேற்கொள்கிறேன் என்றாா். தொடா்ந்து போலீஸாா் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி எச்சரித்து அனுப்பினா்.
கோரிக்கை மனுக்கள் பெட்டி: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து வகையான குறைதீா் முகாம்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இருப்பினும், மக்கள் குறைதீா் முகாமில் மனு அளிப்பதற்காக ஆட்சியா் அலுவலக நுழைவாயிலில் மனுக்கள் பெறும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதில் செலுத்தினால், அதிகாரிகள் அவற்றைப் பாா்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வா். இருப்பினும், மனுக்களை அளிக்காமல் ஆட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிலா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.