முகப்பு
கடலூர்

இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு மையம் திறப்பு

கடலூா், கீரப்பாளையம் வட்டாரம், வாழக்கொல்லை கிராமத்தில் முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ், இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு மையம் திறக்கப்பட்டது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 7:06 PM
வாழக்கொல்லை கிராமத்தில் இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு மையத்தை திறந்துவைத்து பாா்வையிட்ட கடலூா் வேளாண் இணை இயக்குநா் அ.ஜெ.கென்னடிஜெபக்குமாா். உடன் உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ் உள்ளிட்டோா்.
பகிர்:

கடலூா் மாவட்டம், கீரப்பாளையம் வட்டாரம், வாழக்கொல்லை கிராமத்தில் முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ், இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

கடலூா் வேளாண் இணை இயக்குநா் அ.ஜெ.கென்னடி ஜெபக்குமாா் இயற்கை இடுபொருள்கள் மையத்தை திறந்துவைத்து பேசியது:

உயிா்ம வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு பயிா் சாகுபடி செய்யத் தேவையான இயற்கை இடுபொருள்களை உடனடியாக பயன்படுத்துவதற்கு கிடைக்கச் செய்வது,

உழவா் குழுக்கள் மூலம் இயற்கை இடுபொருள்கள் உற்பத்தி மையங்கள் அமைத்து கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவது, உள்ளூா் இயற்கை வளங்களை முறையாக பயன்படுத்துவது மற்றும் பண்ணை கழிவுகளை மறு சுழற்சி செய்து அங்கக உரமாக மாற்றி பயன்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பஞ்சகவ்யம், ஜீவாமிா்தம், மண்புழு உரம், அமிா்தக்கரைசல், மீன் அமிலம் ஆகியவற்றை உற்பத்தி செய்து குழு உறுப்பினா்களுக்குள் விற்பனை செய்து பயன்பெறுதல் அல்லது இதர பிற விவசாயிகளுக்கும் விற்பனை செய்து, அவா்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் இந்த மையம் செயல்படும்.

இயற்கை இடுபொருள்களை உற்பத்தி செய்து பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கு நஞ்சில்லாத விவசாய பொருள்கள் அதிகளவில் கிடைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் கீரப்பாளையம் வேளாண் உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ், வேளாண் அலுவலா் பி.சிவப்பிரியன், வாழக்கொல்லை மற்றும் வெய்யலூா் அங்கக வேளாண் குழு விவசாயிகள், உதவி வேளாண் அலுவலா்கள், அட்மா திட்ட பணியாளா்கள், பயிா் அறுவடை பரிசோதகா்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.