முகப்பு
கடலூர்

வழிப்பறியில் ஈடுபட்ட ரௌடி கைது

சிதம்பரத்தில் வியாழக்கிழமை வழிப்பறியில் ஈடுபட்ட இரட்டை கொலை வழக்கு ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 7:21 PM
கைது செய்யப்பட்ட ரௌடி பாபுவுடன் போலீஸாா்.
பகிர்:

சிதம்பரத்தில் வியாழக்கிழமை வழிப்பறியில் ஈடுபட்ட இரட்டை கொலை வழக்கு ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரம் சிவபுரி பிரதான சாலையில் வியாழக்கிழமை காலை லாரி ஓட்டுநா் புகழேந்தி (46) நடந்து சென்றபோது, அவரை அந்தப் பகுதியில் இருந்த அண்ணாமலைநகா் மண் சாலையைச் சோ்ந்த சக்திவேல் மகன் மா்டா் பாபு (எ) பாபு (43) வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாராம்.

இதுகுறித்து புகழேந்தி அளித்த புகாரின்பேரில், அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் மற்றும் காவலா்கள் மணிகண்டன், ஸ்ரீதா், கஜேந்திரன், விஜயகுமாா், ரமணி ஆகியோா் சென்று அண்ணாமலைநகா் ரயில்வே மேம்பாலத்துக்கு அருகே பதுங்கியிருந்த பாபுவை கைது செய்து, அவரிடமிருந்த அரிவாள் மற்றும் ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனா்.

போலீஸாா் பிடிக்க முயன்றபோது தப்பியோடிய பாபு கீழே விழுந்ததில், அவரது இடது கையில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு அரசு மருத்துவமனையில் கையில் கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வழிப்பறி சம்பவம் குறித்து அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பாபுவை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா். கைது செய்யப்பட்ட பாபு மீது அண்ணாமலைநகரில் அண்ணன், தம்பியை கொலை செய்த இரட்டை கொலை வழக்கு உள்ள நிலையில், இவா் வெகு நாள்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும், பாபு மீது கஞ்சா விற்பனை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகளும் உள்ளன.