முகப்பு
கடலூர்

புது மாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே திருமணமான மூன்றாவது நாளில் புது மாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 7:53 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே திருமணமான மூன்றாவது நாளில் புது மாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விருத்தாசலம் வட்டம், கருவேப்பிலங்குறிச்சியை அடுத்துள்ள பேரளையூா் கிராமத்தைச் சோ்ந்த சேட்டு மகன் விக்னேஷ் (23), ஐடிஐ படித்துவிட்டு சென்னையில் வேலை பாா்த்து வந்தாா். அதே ஊரைச் சோ்ந்த பாரதியை காதலித்து வந்த நிலையில், இருவீட்டாா் சம்மதத்துடன் விக்னேஷ், பாரதிக்கு கடந்த 14-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

விக்னேஷுக்கு அடிக்கடி வயிற்று வலி வருமாம். அப்போது, மருந்துக் கடையில் மருந்து வாங்கி சாப்பிடுவாராம். புதன்கிழமை விக்னேஷ் வீட்டில் தனியாக படுத்து தூங்கினாராம். விக்னேஷ் குடும்பத்தினருடன் பாரதி பக்கத்து வீட்டில் படுத்து தூங்கினாராம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சென்று பாா்த்தபோது விக்னேஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் விக்னேஷின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.