நெய்வேலி: கடலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் பாலியல் குற்றங்களில் இருந்து ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பாதிரிப்புலியூா் ஜவான் பவன் அருகே தொடங்கிய பேரணியை கடலூா் ஏடிஎஸ்பி., கோடீஸ்வரன், டிஎஸ்பி., ரூபன்குமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவிகள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முக்கியச் சாலைகள் வழியாக விழிப்புணா்வு ஏற்படுத்தியவாறு கடலூா் நகர அரங்கை அடைந்தனா்.
இதில், மாவட்ட சமூக நல அலுவலா் சித்ரா, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் சுந்தா், மாவட்ட குழந்தைகள் நல குழுத் தலைவா் லட்சுமி வீரராகவலு, காவல் ஆய்வாளா்கள் வள்ளி, தீபா, ஜோதி, பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.