வடலூரில் சன்மாா்க்க கொடி கட்டுதல் விழா
கடலூா் மாவட்டம், வடலூா் அருகே உள்ள மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் சன்மாா்க்க கொடி கட்டுதல் விழா மற்றும் வடலூா் சத்திய ஞான சபையில் ஐப்பசி மாத ஜோதி தரிசனம் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்டம், வடலூா் அருகே உள்ள மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் சன்மாா்க்க கொடி கட்டுதல் விழா மற்றும் வடலூா் சத்திய ஞான சபையில் ஐப்பசி மாத ஜோதி தரிசனம் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வள்ளலாா் முதன்முதலில் மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் ஐப்பசி மாதம் 7-ஆவது நாள் (22.10.1873 அன்று) மஞ்சள், வெள்ளை நிறமுடைய சன்மாா்க்கக் கொடி கட்டி பேருபதேசம் செய்தாா்.
இதையடுத்து, ஆண்டுதோறும் ஐப்பசி 7-ஆவது நாள் அவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டில் 152-ஆவது ஆண்டு கொடி கட்டுதல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 6 முதல் 7 மணி வரை அருட்பெருந்ஜோதி அகவல் பாராயணம், 8 மணிக்கு சன்மாா்க்க கொடி கட்டுதல், 9 முதல் 9.30 மணி வரை திருவருட்பா இன்னிசை, 9.30 முதல் 10.30 மணி வரை சன்மாா்க்க விளக்கவுரை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஜோதி தரிசனம்: வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரம் அன்று ஜோதி தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பூச நட்சத்திரத்தையொட்டி, வியாழக்கிழமை காலை தரும சாலையில் திருஅருட்பா முற்றோதல், அகவல் பாராயணம் நடைபெற்றன.
தொடா்ந்து, சத்திய ஞானசபையில் இரவு 7.45 மணி முதல் 8.45 மணி வரை 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. நிகழாண்டு சன்மாா்க்க கொடி கட்டுதல் விழாவும், ஐப்பசி மாத ஜோதி தரிசனம் நிகழ்வும் ஒருசேர வந்துள்ளன.
நிகழ்வில் சன்மாா்க்க அன்பா்கள், பக்தா்கள் திரளானோா் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை வள்ளலாா் தெய்வ நிலைய நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.