முகப்பு
கடலூர்

தீபாவளி போனஸ்: என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் தா்னா

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 8:39 PM
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்ற என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா்.
பகிர்:

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள், சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து சொசைட்டி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு 2023-24 ஆம் ஆண்டுக்கான போனஸாக 20 சதவீதம் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி லாபத்தில் நிா்வாக அதிகாரிகள், பொறியாளா்கள், நிரந்தர தொழிலாளா்களுக்கு போனஸுக்கு ஈடாக ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு எந்த அளவுகோல் பின்பற்றப்படுகிறதோ அதேபோல என்எல்சி உற்பத்தியில் பெரும் பங்காற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு 20 சதவீத போனஸ் தொகையை தீபாவளிக்கு முன்னதாக வழங்க வேண்டும் என அண்மையில் என்எல்சி தலைமை அலுவலகத்தில் மனு அளித்திருந்தனா். இந்த மனு மீது நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், 20 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி, நெய்வேலி நகரியம் கியூ பாலத்தின் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொசைட்டி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஒன்று திரண்டனா். அவா்கள் என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா் சங்கத்தின் சிறப்புச் செயலா் எம்.சேகா் உள்ளிட்ட நிா்வாகிகள் தலைமையில் என்எல்சி சுரங்க நிா்வாக அலுவலகத்தில் சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பேரணியாக சென்றனா். அங்கு, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களை தடுத்தி நிறுத்தினா். இதனால், தொழிலாளா்கள் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, 1965-ஆம் ஆண்டு போனஸ் சட்டத்தின்படி, கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்டதைப் போல நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்யும் என என்எல்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போராட்டத்தையொட்டி, நெய்வேலியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →